Wednesday, February 17, 2016

வெள்ளை யக்ஷி

எக்ஸ்ட்ராக்டர் பேன் வழி
வெளிச்சம்  பார்க்கும் ஒருத்தியை
புணர்ந்த கதையை
தாழ்ந்த குரலில்  ஒருத்தன்
இருட்டுக்குள் முடங்கிக் கிடக்கும்
ஆயிரம் ஒருத்திகளில் அவள் ஒருத்தி
Taken திரைப்படத்தில்
இப்படியொரு காட்சியை  கவனித்திருக்கலாம்
இந்நகரம்  இப்படியும்  பயமுறுத்தும்
அடுத்த  வார விடுமுறையில்
அவன்  வட்டத்தில் வேறொருத்தன் செல்லக்கூடும்
அவனிடம் 
குறிப்பு  ஒன்றை கொடுத்து விடவேண்டும்
வெளியே  வா
துரோகம்  பழகு ஆனந்த  வாழ்வு
வெளியே வா
இதைத்தான்
இந்த  வெளிச்சம்  வாக்குறுதி அளிக்கிறது
நைஃப் சிக்னலில்
லடுக்கி மந்தே ஹிந்தியில்
யாரோ ஒருத்தனிடம் யாரோ ஒருத்தன்

Tuesday, February 16, 2016

பேய்விரட்டு

பேய் விரட்டும்
சாமித் தாத்தா சும்மா தான் இருக்கிறார்
தெக்கால பொட்டக் கிணறுகளை மூடியாச்சு 
மேக்கால மந்தையில் 
சுற்றி சுற்றி வீடுகள் வந்திடுச்சு 
பொட்டக் கிணற்றில் விழுந்து செத்துப்போன 
டெயிலர் மகளும் 
வடக்குத்தெரு பேச்சியம்மாளும் 
மந்தையில் நிக்கிற முனியும் சொடலையும் 
கொஞ்ச  காலமாக 
எந்த வயசுப் பொண்ணு மேலையும் இப்ப வர்றதில்லை 
மக்காளி கோடிக்குள்
புதுசா சாகுல் ஹமிது சாமி  வந்திருக்கார் 
இடைக்காலமா 
உத்திரத்தில் தூக்குபோட்டு செத்துபோன 
யாரெல்லாமோ  வருவதாக ஊர் பேச்சு 


Tuesday, January 20, 2015

குடிசைக்குள் பெய்யும் மழை

வெகு நாட்களுக்குப்பின்
மழை பெய்து  கொண்டிருக்கிறது
ஜன்னல் வழியே
ரசித்துக்  கொண்டிருந்தேன்

சற்றெனெ
உள் கதவு திறந்து
விழி வழியே வெளியேறியது
வெள்ளை நிற உருவம்  ஒன்று

சற்று நேரம்
என்னை வெரித்து பார்த்துவிட்டு
ஓர்  அடர்  இருட்டுக்குள் நுழைந்து கொண்டது அது

நான்  பின்துடர்ந்தேன்

அது ஒரு அடைமழை  இரவு
காற்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது

சிம்மினி விளக்கிற்குள்
உயிருக்கு  ஊசலாடும் சிறு வெளிச்சம்
அதன்   கருணையில் ஓர்  கூரை
கூரைக்குள்ளிலும் மழை

ஒழுகாத மூலையில்
அரை தூக்கத்தில்  முனங்கும் மூன்று  குழந்தைகள்
மழை நீரை
சிறட்டையில்  அள்ளி  வெளியேற்றிக் கொண்டிருந்தாள் ஒருத்தி

அவள்
மேலே  பார்க்கிறாள்
தாட்சணையின்றி கொட்டியபடி மழை
அவள் விழிகளில்  ஒருவித பரிதவிப்பு

சற்று நேரத்திற்குமேல்
என்னால் நிற்க முடியவில்லை

சுற்றுமுற்றும்
 அந்த உருவத்தை  தேடினேன்
 அது குழந்தைகளில்   இளயதில்
 உள்நுழைந்து  ஒளிந்து  கொண்டது

இளய குழந்தையின்
சாயலை கண்ணாடியில் பார்த்த ஞாபகம்

இப்போது
என்னைச் சுற்றி  மூன்று விதமான
மழை பெய்து  கொண்டிருக்கிறது

கூரைக்குள்
பெய்யும் மழையை
என்னால்  ரசிக்க முடியவில்லை

பின் குரலில்
யாரோ  தோள்தட்ட
மின்சார எர்த்தைபோல் உடலுக்கி
உள்புகுந்தது
மின்னல் வேகத்தில் வந்த உருவம்

எதற்கென தெரியவில்லை
விழிகளில்  நிரம்பிய  நீர்
முகத்தில்  படர்ந்து வழியத் தொடங்கியது

Sunday, January 18, 2015

ச../\..(க)...தி

பெரியவரோ  சிறியவரோ  
வழியில்  சந்தித்தால்
பலவேஷத்தின் "முதலாளி  வணக்கம்"
நாவில்  ஒட்டியிருக்கும்

போன முறை  சந்தித்தபோது
வணக்கம்  சொன்னேன்
பதில்  வணக்கத்திற்குமுன்
முதலாளி  என்றதை சேர்த்து கொண்டார் பலவேஷம்

டவுசர் பிராயத்தில்
தூக்கு  சட்டி ஏந்தி முக்கு டீக்கடைக்கு  வரும்போதெல்லாம்
ஆள்  கூட்டத்தில் இருந்து  விலகி
டீக்கடையின் மறையோரத்தில் குத்தவைத்து இருக்கும் பலவேஷம்
தனியாக தெரிவார்

"பொரு"
டீ மாஸ்டரின்  அதட்டலுக்குபின்
நெளிந்த அலுமினிய டம்ளரில்
இடைவெளி அந்திரத்தில் ஊற்றப்படும்
டீயை பவ்வியமாக  குடித்து விட்டு  நகர்ந்து சென்றுவிடுவார்

இன்று
ஆள்  கூட்டத்தில் நின்று  கண்ணாடி  கிளாசில்
 டீ  குடிக்கிறார் பலவேஷம்

யாரோ
எதோ ஒரு  நூற்றண்டில்
கொட்டிய கறையை
காலம் துடைத்து எறிந்துவிட்டிருக்கிறது
என்று பெருமிதத்தம்  கொண்டேன்

பாவனை கதைக்கு
வேர் கேட்டு
ஒருவரை ஊரை விட்டு விலக்குகிறார்கள்
எரிக்கிறார்கள்

நூலில்
வெளிச்சத்தை போதிப்பவர்கள் கூட
சிறு  பிள்ளைகள்  போல்
சகதிகளை  எறிந்து விளையாடுகிறார்கள்

ஒரு சாலையில் பிரியும்
ஐந்து  வீதிகளில் பத்து  விதமான சண்டைகள்

பலவேஷம்  போன்றவர்கள்
நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்

ஈரக்குலையில்
சிகரெட் புகைக்  கறைபோல்
இன்னும் படிந்திருக்கிறது  ச...க...தி

மங்கலேயன்
பெருமை வெத்துப் பட்டாசு.

Thursday, December 11, 2014

இரண்டு காட்சிகள்

கால்கடுக்க
வாசலில்  எதிர்பார்த்து நிற்கிறாள்
குழந்தை அழும் சத்தம் கேட்கிறது
உள்ளே ஓடுகிறாள்
வெளியே வருகிறாள்
முக்குக் கடையில் 
ஒரு பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்கிறாள்
தெருவில் விளையாடும் சிறுவனிடம்
நேரம் கடந்தது
சிறுவன் வந்தான்
பால் பாக்கெட்  தீர்ந்து விட்டதாக சொல்கிறான்
பக்கத்துக் கடையில் கேட்டியா
அங்கேயும் இல்லை  என்றும் 
பாக்கத்து ஊருக்குத்தான் போகணும் என்றான்
அழுவதை நிறுத்துவதாக இல்லை  குழந்தை
சீனித் தண்ணீரை வாயில் தொட்டு வைத்து
குழந்தையை சற்று நேரத்திற்கு உறங்கச் செய்துவிட்டாள்
மீண்டும் வெளியே வந்தாள்
இளவெட்ட பசங்க சிலர்
வேகமாக பைக்கில் போயிக்  கொண்டிருந்ததை பார்த்தாள்
சற்றே தூரத்தில் இருக்கும் ஒரு சின்ன நகரம்
அங்கேயே நிற்பர்களும்
வீதியில் போவோரும் வருவோரும்
எதோ ஒரு அறையப்பட்ட உருவத்தை அண்ணாந்து பார்க்கிறார்கள்
கூடி நிற்பவர்கள் கரவோசையையும்  
விசில் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்
சதசதவென கீழே ஈரமாகிக் கொண்டிருந்தன
வழியும் அந்த நீர் வெள்ளை நிறத்தில் இருந்தது
அது என்னவென்று கேட்காதீர்கள்
இதேபோல் எதோ ஒரு வீதியில் யாரோ ஒருத்தி நிற்கிறாள்
வேறொரு நிலமும் ஈரமாகிறது 
அங்கு நானும் நீங்களும்
நிற்கிறோம் வேடிக்கை பார்த்தபடி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...