Tuesday, August 31, 2010

முற்றுப்புள்ளி
சாஸ்திரமும்
நாள் நட்சத்திரமும்
ஜாதக பொருத்தமும்
விளக்கேற்றி வாழப்போகும்
குடும்பத்தின் சூழலும்
சீதனப் பொருட்களும்
சார்த்தும் தாலியும்
உடுத்தும் புடவைகளும்
நல்லதாக சரிபார்த்து
மணமேடை உயர்த்துபவர்கள்
மாலைசூடும் மணமக்களின்
பாலின ரகசியங்களையும்
உளவியல் பிரச்சனைகளும்
மணப் பொருத்தங்களும்
இரு வீட்டார்களும்
தம் மக்களிடையே
சரி பார்த்திருந்தால்
மணவிலக்கு தேடுபவர்களின்
மன்றத்தின் வாசலின்
வரிசைகள் குறையும்
மாற்றான் வேலிக்குள்
மல்லிக்கொடி படர்வதை
முளையிலே தடுக்கலாம்
மறைமுக உறவுகளால்
உயிர்ப்பலி காக்கலாம்
படிதாண்டி சென்று
உறவுகள் அமைத்து
வாழ்கையை சிதைத்து
ஊடகதலைப்புச் செய்திகளில்
கேள்விக்குறியாய் நிற்ப்பதற்கு
முற்றுப்புள்ளி வைக்கலாமே ?

Monday, August 30, 2010

குடியேற்றம்என்றோ இறந்துவிட்டதென்று
தூக்கியெறிந்த கை கெடிகாரம்
அம்மாவுக்கு தெரியாமல்
ஒழித்து வைத்திருந்த
அரையாண்டு மதிப்பெண் அட்டை
செல்லறித்துப்போன பள்ளியின்
பாடப் புத்தகங்கள்
படிப்பிற்காக இடம்பெயர்ந்துபோன
நண்பனின் கடிதங்கள்
பண்டிகை நாட்களின்
வாழ்த்து அட்டைகள்
தூசிபடிந்த ரேடியோ
அண்ணனுடன் சண்டைபோட்டு
அழுது வாங்கிய
விளையாட்டு சாமான்கள்
மூத்த அக்காவின்
திருமண அழைப்பிதழ்கள்
ஆடி உறங்கிய
தொட்டில் கம்பு
ரெங்குப்பெட்டியில்
பத்திரமாக வைத்திருந்த
அப்பா அம்மாவுடனான
எங்கள் சிறுவயதுப்புகைப்படங்கள்
கிழிந்துபோன உடைகள்
மருந்துத் தாள்கள்
மருந்து ஊட்டிய
பால் சங்கு
வெள்ளி அருணாக்கொடி
துலைத்தற்க்காக அடிவாங்கிய
இடதுகை மோதிரம்
நீண்ட  பட்டியலாக
 பழயவீட்டின் மூலைகளில்
உறங்கி இருந்தவைகள்
ஒவ்வென்றாய் உயிர்த்தெழுந்தது
புது வீட்டிற்கான குடியேற்றத்தில்.

Thursday, August 26, 2010

நீர்த்துளிகள்
*என் மேனியெங்கும்
அவள் இதழ் இட்டகோலம்
முத்தம்

*உழைப்பில்ல ஊரில்
சோம்பேறிகளின் ஆதிக்கம்
கொடிகட்டி பறக்குகிறது
வறுமை

*மழை நின்றதும்
மரத்திற்கு வியர்த்தது
கிளைகளில் தேங்கிய
நீர்த்துளிகள்

*அடைகாத்த குஞ்சை
விரட்டியது தாய்க்கோழி
வாத்துக் குஞ்சு

Wednesday, August 25, 2010

அனுபவித்து வாழ்வோம்
வெற்றுடலாய் வந்தோம்.....
வெறுமையாய் செல்கிறோம்.....
தேடிச் சென்றதும்
நாடி வந்ததும்
சொந்தம்கொண்டாடியதும்
உறவற்று நிற்கிறது
வாழ்க்கை பயணத்தில்
கண்ணீரும் புன்னகையும்
நம்மை வழிநடத்துகிறது
ஜனனமும் மரணமும்
ஒருமுறை தான்
மேலவன் எழுதியதை
திருத்துவோர் யாருமில்லை
இரு கருவரைக்கான
வாழ்க்கை தருணங்களில்
அனுபவித்து வாழ்வோம்
சொந்தமென்று ஒன்றுமில்லை
இறைவன் தந்த
வாழ்க்கையைத் தவிர
வெற்றுடலாய் வந்தோம்
வெறுமையாய் ..........

உயிர் தவம்
தோழியை செல்லமாய்
அழைத்தபடி பவ்வியமாக
என்னை கடந்துசெல்கையில்
தலை தாழ்த்திய
ஓரப் பார்வையாலும்
சிவந்த இதழ்களின்
சிறு புன்னகையாலும்
மலர் முகத்தின்
வெட்கத்தாலும் என்
ஆயுளின் நாழிகைகள்
நித்தமும் புத்துயிர்பெற
நீ கல்லூரி சென்றுவரும்
பேரூந்து நிறுத்தத்தில்
தவம் கிடக்கிறேன்

Tuesday, August 24, 2010

காதல் தந்த மாற்றம்
காட்சிகளில்
வண்ணங்கள் தந்தாய்
சிந்தனைக்கு
ஒளி தந்தாய்
எண்ணங்களுக்கு
தூய்மை தந்தாய்
வெறும் எழுத்திற்கு
கவிதை உயிர்தந்தாய்
தனிமைகளை துரத்தி
துணை தந்தாய்
பெண்மையின் அழகால்
எனக்குள் காதலைத் தந்து
ஆண்மையை உணரச் செய்தாய்

Sunday, August 22, 2010

ஆறாம் அறி(ழி)வு
மனித உறவுகளும்
தரணிவாழ் உயிரினங்களும்
இயற்க்கை வளங்களும்
ஆறாம்அறிவில் உயிர்த்தெழுந்த
நாகரீக மிருகத்தின்
வேட்டை இரையாகி
உயிர் மாண்டு
கால ஏட்டிற்குள்
நிழல் சித்திரமாய்
சிறைப் படுகிறதே
துடரும் கோரங்கள்
மீதமாய் நாங்கள்
என்செய்வோம் இறைவா ......

Saturday, August 21, 2010

என்னிலிருந்து நீ.....என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீவந்ததை

Thursday, August 19, 2010

உறவுக் கிளிகள்
*கருவேப்பிலை உறவுகள்
முதியோர் காப்பகத்தில்
பெற்றோர்கள்

*அப்பா அம்மா சண்டை
மௌனவிரதத்தில்
வீடு

*ஊர்முழுக்க நிலமுள்ளவன்
உறங்குகிறான் சொந்தமில்லாத
ஆறடி நிலத்தில்
இடுகாடு

*நீண்ட தூர
பயணத் தோழி
மனைவி

*உபகரணம் எல்லாம்
குளித்து மலர்சூடி
சந்தனம்பூசி பொட்டுவைத்தது
ஆயுத பூஜை

*உயிரற்ற ராஜகுமாரன்
வீதி ஊர்வலம்
பிணம்

*கீழ்சாதி மந்திரிக்கு
மேல்சாதி ஊழியன்
பணிவிடை செய்கிறான்
பதவி

*தனித்தனியாக
பறந்து போனது
உறவுக் கிளிகள்
பாகப் பிரிவு

தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு

தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு (spontaneity)

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் தொகுப்பு: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living Volume: I - J. Krishnamurthi])

வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிற மன உந்துதலாலோ, தன்னுடைய தோழியால் அழைக்கப்பட்டோ அந்தப் பெண் வந்திருக்கலாம். அவர் நன்றாக, நாகரீகமான உடையணிந்திருந்தார். பிறர் மனதில் அவர் பால் ஒரு கெளரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிற தோற்றம் அவருடையது. அதே நேரத்தில், தன் தோற்றத்தின் - மேலான இலட்சணத்தையும், அழகையும் - அவர் தெளிவாக அறிந்திருந்தார். சதாநேரமும், தன்னைப் பற்றிய முழுப் பிரக்ஞையுடனும், சுய நினைவுடனுமே அவர் இருந்தார் - தன்னுடைய உடலழகு, பார்வைகள், சிகையலங்காரம், தன் தோற்றமும், செய்கைகளும் பிறரிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள், அபிப்பிராயங்கள் பற்றிய பிரக்ஞைகள் அவை. தனிமையிலும், தனக்குள்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, தணிக்கைச் செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டவை அவரின் தோரணைகளும் செயல்களும், பாவனைகளும். அது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, தான் அமர்ந்திருந்த நிலையையும், தன்னுடைய தேக, மனோ பாவங்களையும், தேர்ந்த விதத்தில் அவர் மாற்றிக் கொண்டதிலிருந்து தெரியவந்தது. எது நேர்ந்த போதும், தான் வளர்த்துப் பண்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிலையிலும் தோற்றத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்வதில் அவர் உறுதியாய் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. கூட்டத்தினர் அனைவரும் தீவிரமாகவும், ஆழ்ந்தும் விவாதித்துக் கொண்டு இருந்த நேரம் எல்லாம் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்திலிருந்து மாறவில்லை. நோக்கங்களுடனும், நோக்கங்களுக்காகவும் தன்னை மறந்து பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த அந்தக் கூட்டத்திடையே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தது போலவும், அதில் தானும் பங்கெடுத்துக் கொள்வது போலவும் காட்டிக் கொள்ள அந்த சுயநினைவு மிக்க பெண் முயன்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. விவாதிக்கப்படுகிற பொருளில் விஷய ஞானம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவர் ஏதும் பேசவில்லை. ஆனால், அவர் கண்களில் தெரிந்த ஒருவித திகைப்பும் பயமும் அவரால் அந்தத் தீவிர உரையாடலில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைக் காட்டியது. தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து, தன்னுடைய பண்படுத்தப்பட்ட பாவனைகளைத் தொடர்ந்தபடி, தனக்குள்ளேயே அவர் பின்வாங்குவதையும் உணர முடிந்தது. பிறரால் தூண்டப்படாததும், தன்னிச்சையுமான இயல்பு (spontaneity) அவரின் விடாமுயற்சியால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.


ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தோற்றத்தையும், பாவனையையும் தனக்குள்ளே வளர்த்துக் கொள்கிறார்கள்; அதையே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தன்னுடைய இலாபகரமான வணிகத்தையும் தன் வாழ்வின் வெற்றியையும் தன் நடையில் காட்டும் உத்யோகஸ்தர், தன்னுடைய இருப்பையும், வருகையையும் தன் புன்முறுவலால் அறிவிக்கும் மனிதர், தேடலும் அழகுணர்வும் நிறைந்த கலைஞன், மரியாதையும் பணிவும் நிறைந்த சீடன், கட்டுப்பாட்டுடன் உலக இன்பங்களை மறுதலித்து ஒழுகும் ரிஷி என்று நாம் வாழ்வில் பலவிதமான தோற்றங்களையும், பாவனைகளையும் பார்க்கிறோம். சுயப்பிரக்ஞை நிறைந்த அந்தப் பெண்ணைப் போலவே, மத கோட்பாடுகளிலும் தவத்திலும் நம்பிக்கை கொண்ட ரிஷியும் சுயக்கட்டுப்பாடு என்கிற தோற்றத்துக்குள்ளூம் பாவனைக்குள்ளும் தன்னைப் புகுத்திக் கொள்கிறார். சுயக்கட்டுப்பாடு என்பது மறுதலிப்பையும் தியாகத்தையும் தற்பயிற்சியினால் பண்படுத்தி வளர்ப்பதிலேயே வருகிறது. பிறர் தன்னைப் பற்றி கொள்ளப் போகும் மதிப்பீடுகளுக்காகவும், அந்த மதிப்பீடுகளினால் தனக்கு விளையப் போகும் பலன்களுக்காகவும் அந்தப் பெண் தன்னிச்சையான இயல்பைத் தியாகம் செய்தார். அதேபோல், ஆன்மீக ரிஷியும் வாழ்வின் எல்லையை, இறுதியைக் காண்பதற்காகவும், கடப்பதற்காகவும் தன்னை பலியிட்டுக் கொள்கிறார். இருவருமே வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு நிலைகளில், ஆனால் ஒரேவிதமான விளைவைப் பற்றியே சிரத்தை கொண்டுள்ளனர். ரிஷிக்குக் கிடைக்கிற பலன், அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கிற பலனை விட, சமூக அளவில் உயர்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தாலும் கூட, இருவருக்கும் வித்தியாசம் இல்லை. அந்தப் பெண்ணை விட ரிஷியோ, ரிஷியை விட அந்தப் பெண்ணோ மேலானவர் இல்லை. இருவரும் அடிப்படையில் ஒன்றானவர்களே. இருவருமே புத்திசாலிகளோ, நுண்ணறிவாளர்களோ இல்லை. ஏனெனில், இருவரின் தோற்றங்களும், வெளிப்பாடுகளும் அவர்கள் மனதின் சிறுமையையும், தாழ்மையையுமே காட்டுகின்றன. சிறுமையும் தாழ்மையும் கொண்ட மனம் எப்போதும் ஞானமுள்ளதாகவோ, வளமானதாகவோ மாற இயலாது. அது எப்போதும் சிறுமையிலும் தாழ்மையிலும் தான் உழன்று கொண்டிருக்கும். அத்தகைய மனமானது, தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ, நற்பண்புகளைப் பயிலவோ விழையலாம். ஆனபோதிலும் கூட அது எப்போதும் சிறுமையானதாகவும், ஆழமில்லாததாகவும், அற்பமானதாகவுமே இருக்கிறது. வளர்ச்சி, முதிர்ச்சி, அனுபவம் என்கிற பெயர்களில் எல்லாம் அது தன்னுடையை சிறுமையையே வளர்த்துக் கொள்கிறது. ஓர் அருவருப்பான, அசிங்கமான விஷயத்தை அழகாக்க முடியாது. அதுபோலவே, சிறுமை கொண்ட மனத்தையும் அழகாக்கவோ, வளமாக்கவோ முடியாது. சிறுமை கொண்ட மனம் துதிக்கின்ற கடவுளரும் சிறுமையானவரே. கல்வி கேள்விகளால் பெறுகிற புலமையாலோ, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டுக்களாலோ, விவேகம் நிறைந்த மேற்கோள்களாலோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அலங்காரங்களாலோ, பூஷணங்களாலோ- சிறுமை கொண்ட மனமானது - பூரணமிக்கதாகவோ, ஆழங்காண இயலாத ஞானமுள்ளதாகவோ மாறுவதில்லை. அகாதமான ஆழமுள்ள மனமே அழகாகும். நகைகளும் நாம் தேடிப் பிடித்த நற்பண்புகளூம் அழகாகா. தன்னுடைய சிறுமையையும் தாழ்மையையும் எள்ளளவும் சந்தேகமின்றி உணர்ந்த மனமே, ஒப்பீடுகள் செய்யாத, மதிப்பீடுகளை உதறிய மனமே, அழகாக இயலும். தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பும், அதனால் பிறக்கிற தன்னுணர்தலுமே அத்தகைய அழகு ஒருவருள்ளே வந்து தங்கி இருத்தலுக்கு வழி வகுக்கும்.

அந்தப் பெண்ணின் வெளிப்பூச்சும், ஒழுங்கும் ஒருமுகமும் படுத்தப்பட்ட ரிஷியின் தோற்றமும் - அடிப்படையில் ஒருவருக்கு இருக்க வேண்டிய, தன்னிச்சையான இயல்பை - வேண்டாம் என்று மறுதலிக்கிற - அதனால் வதைபடுகிற - சிறுமை கொண்ட மனத்தின் விளைவுகளே ஆகும். பண்படுத்தப்படாத, தன்னிச்சையான இயல்பானது - தங்களின் சரியான அடையாளத்தை, இயல்பான குணாதிசயங்களைத் தங்களுக்கும் பிறருக்கும் காட்டிவிடும் என்று - அந்தப் பெண்ணும், ரிஷியும் பயப்படுகிறார்கள். எனவே, தன்னிச்சையான தன்மையை அழிப்பதற்கு அவர்கள் இடையறாது முயல்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்பாடுகளுக்கும், வெளிப்பூச்சுகளுக்கும், தோற்றங்களுக்கும், தங்களைப் பற்றிய முடிவுகளுக்கும் தாங்கள் எந்த அளவிற்கு இணங்கிப் போகிறோம் என்பதை வைத்து அவர்கள் இருவரும் தங்களின் வெற்றியை மதிப்பிடுகிறார்கள். ஆனால், எது ஒன்று குறித்தும் கேட்கப்படுகிற 'இது என்ன ? ' என்கிற கேள்விக்கு, விடைதருகிற ஞானச்சுரங்கத்தின் ஒரே சாவி தன்னிச்சையான இயல்புதான். தன்னிச்சையான பிரதிபலிப்பே - மனதை, அதன் சரியான வடிவத்துடன், கண்டுபிடிக்கவும், வெளிக்காட்டவும் முடியும். ஆனால், அப்படி கண்டுபிடிக்கப்படுகிற மனமானது, அலங்கரிக்கப்படும்போது, தன்னை மட்டுமல்ல, கூடவே தன்னிச்சையான இயல்பையும் அழித்துக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பைக் கைவிடுவதும், அழித்துக் கொள்வதும் சிறுமை கொண்ட மனத்தின் வழிகளாகும். அப்படி அழித்துக் கொண்ட பின்னர் சிறுமை கொண்ட மனமானது, தேவையான இடங்களிலும், தேவையான நிலைகளிலும் தேவையான அளவுக்கு தன்னை ஜோடித்துக் கொண்டும், அரிதாரம் பூசிக்கொண்டும் அகமகிழ்கிறது. இத்தகு ஜோடனைகள் மற்றும் வேடங்கள் மூலம் சிறுமை கொண்ட மனமானது தன்னைத் தானே வழிபட்டுக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பாலும், விடுதலை பெற்ற மனத்தாலுமே, தன்னையுணர்கிற கண்டுபிடிப்பைச் செய்ய இயலும். கட்டுப்படுத்தப்பட்ட மனம் எதையும் கண்டுணர இயலாது. கட்டுப்படுத்தப்பட்ட மனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவோ, தயையற்றதாகவோ கூட இருக்கக் கூடும்; ஆனால், அதற்கு எதையும் கண்டுணர இயலாது என்பதால், ஆழமான ஞானத்தை அதனால் கண்டடைய இயலாது. பயம்தான், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்கிற தடைகளை உருவாக்குகிறது. தூண்டப்படாமல் தன்னிச்சையான இயல்புடனே பயத்தைக் கண்டறிதலே பயத்திலிருந்து விடுபட வழியாகும். ஓர் ஒழுங்கிற்கும், தோற்றத்திற்கும், உருவமைப்பிற்கும் இணங்கி நடத்தல் - அது எந்த நிலையில் இருப்பினும் - பயத்தின் அடையாளமே. அந்தப் பயமே முரண்பாடுகள், குழப்பம், பகை போன்றவற்றை வளர்க்கிறது. பண்படுத்தப்படாத தன்னிச்சையான இயல்பிலே இயங்குகிற மனமானது, பயமற்ற புரட்சி செய்கிறது; விடுதலை காண்கிறது. பயப்படுகிற எந்த மனமும் தன்னிச்சையான இயல்பையோ, விடுதலையையோ அடைய இயலாது.

 தன்னிச்சையான இயல்பின்றி ஆத்ம ஞானம் அடைய இயலாது. ஆத்ம ஞானம் அடையாவிட்டால், மனமானது போகிற, வருகிற காட்சிகளால் வசீகரிக்கப்பட்டு, காட்சிகளின் தாக்க்கங்களூக்கேற்ப - உருமாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய தாக்கங்கள் - காண்கிற காட்சியின் பரிணாமத்திற்கும் எல்லைக்கும் உட்பட்டு - மனத்தைக் குறுகியதாகவோ, விரிவானதாகவோ ஆக்கலாம்; என்ற போதிலும், மனம் விடுதலை அடையாமல், கண்ட காட்சியின், அதன் தாக்கத்தின் வரையறைக்குளேயே இருக்கும். காட்சிகளின் தாக்கங்கள் மூலம் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிற மனத்தை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவோ, உருக்குலைக்கவோ இயலாது. எதன் அடிப்படையிலும் தூண்டப்படாத, வடிவமைக்கப்படாத மனத்தை ஆத்ம ஞானம் என்கிற சுய அறிவின் மூலமே பெற இயலும். ஆத்மாவானது காட்சிகள், காட்சிகளின் தாக்கங்கள், பண்படுத்தப்படுதல் என்கிறவற்றால் வடிவமைக்கப்படுகிறது. ஆத்மாவை அறிதல் என்பது, எதன் தாக்கங்களுக்கும் உட்படாத, வடிவமைப்புகளைத் தகர்க்கிற, காரணங்களோ பண்படுத்தலோ இல்லாத, தன்னிச்சையான கண்டுபிடிப்பின் மூலமே சாத்தியமாகும்.

Tuesday, August 17, 2010

வண்ணத்துப் பூச்சிகள்
*அந்தோ பரிதாபம்
கடைசி நிறுத்தத்தில்
பயணிகளை பறிகொடுத்த
பேரூந்து

*யாருக்கு பிள்ளை
தற்க்கித்து கொள்கிறார்கள்
விவாகரத்தான தம்பதிகள்

*தேன் இன்றி
ஏமாற்றத்துடன் திரும்பியது
வண்ணத்துப் பூச்சிகள் 
 ஓவியப் பூக்கள்

*பால் இன்றி
அழுதது கன்றுக்குட்டி
இரக்கமற்ற கரவைக்காரன்

*எனக்கு சிலைவைக்காதீர்
தலைவரின் கடைசி ஆசை
காக்கா பயம்

*சிறை மீண்டது
அழுகிய குருதிகள்
மாதவிடாய்

*ஓய்வு எடுக்கிறது
வீட்டு இயந்திரங்கள்
மின்சாரத் தடங்கல்

*இரவு வேளையில்
வீடுதோறும் அழுகைச்சத்தம்
டிவித் தொடர்

*எறும்புகளின் ஊர்வலம்
தரையில் சிந்திய
சர்க்கரை

Monday, August 16, 2010

தேசியக்கொடி

அந்நிய நாட்டின்
தீவிரவாத இயக்கத்தின்
வெடிகுண்டு பயங்கள்
தினமும் சண்டைக்களமாகும்
சட்ட சபைகள்
தலைவர்களின்
பதவிச் சண்டைகள்
ஆட்சியாளர்களின்
நிதிச் சுரண்டல்கள்
அரசியல் கட்சிகளின்
வன்முறைச் சண்டைகள்
இயக்க அமைப்புகளின்
உரிமைப்ப் போராட்டங்களால்
உயிர்ப் பலிகள்
அரசு ஊழியர்களின்
கடமை மீறல்கள்
ஏழைகளுக்கும் எட்டாகனியாய்
உணவுப்பொருட்களின் விலையேற்றம்
முற்றும் துறந்தவர்களின்
பாலியல் லீலைகள்
மாநிலங்களின் ஓயாத
நதிநீர் பிரச்சனைகள்
பதவிர்க்காக உயித்தேழுப்புகிற
கானல் தேர்தல்வாக்குறுதிகள்
போலி நிறுவனங்களின்
பொருள் பித்தலாட்டங்கள்
திரை நட்ச்சதிரங்களின்
புகழ் கொண்டாட்டங்களிலும்
பாலியல் உறவுச்சித்திரங்களிலும்
உயிர்பிரிந்த சவங்களிலும்
ஏழைக் கண்ணீர்களிலும்
செய்திபரப்பும் மீடியாக்கள்
தினமும் உயிர்த்தெழுகிற
கட்சி போராட்டங்கள்
சுதந்திரம் அடைந்து
அரை நூற்றாண்டுகளில்
பதவிக்   காலம்கடத்தி
அரசுகள் மாறியும்
மாறவில்லை தேசம்
சுதந்திர தினத்தன்று
நிமிர்ந்துபறக்க வெட்கப்பட்டு
தலைதாழ்த்தி நிற்கிறது
தேசியக்கொடி.

வாழ்க சுதந்திரம்
தேசம் காப்பதற்காக
உயிர்நீத்த தியாகிகளின்
வாரிசுகள்
எல்லை காக்கும்
போர் வீரர்கள்
தேச நலனுக்காக
கடமைகளில் கண்ணியம்காத்த
அரசு ஊழியர்கள்
ஒவ்வொரு தருணங்களிலும்
தங்கள் உழைப்பால்
தேசத்தை உயர்த்திய
குடிமக்கள்கள்
உண்ண உணவுகொடுக்கும்
விவசாய உழவன்
இவர்களை திரைமறைவிலிட்டு
பணத்திற்கும் புகழிற்கும்
பொழுதுபோக்காக வாழ்கிற
திரை நட்சத்திரங்களின்
அனுபவ நேர்காணல்கள்
தாண்டவ கொண்டாட்டங்கள்
புதிய திரைப்படங்கள்
நிகழ்ச்சி தொகுப்புகளால்
நிரம்பி வழிந்தபடி
சின்னத்திரை மூலம்
இவர்களை ஒளிரூட்டியபடி
நாட்டின் மீடியாக்களின்
சுதந்திரதினக் கொண்டாட்டம்
வாழ்க சுதந்திரம்......?

Saturday, August 14, 2010

தேசப்பிதாவின் கனவுதேசம்பிரிவினை விரிசல்வழி
ஊருடுவி நுழைந்து
தன் அதிகாரத்தால்
நம்மை அடிமையாக்கி
ஆண்டான் ஆங்கிலேயன்
வேற்றுமையால்
சிதறிக் கிடந்த
தனித்த அரசுகளின்
நூற்றாண்டு போராட்டம்
தோல்வியை தழுவியதால்
வெகுண்டெழுந்த காந்தி
நாடுமுழுவதும் பயணித்து
தன் வாய்மொழிகளால்
நம் அடிமையினை
உணரச் செய்து
ஒற்றுமை வேலிபினைத்து
அகிம்சை ஆயுதத்தால்
அறப் போர்தொடுத்து
வெள்ளையனை விரட்டுயடித்து
தேசமாதாவின் அடிமைச்சங்கிலியை
உடைத்தெறிந்து
சுதந்திர தேசம்
உயிர்த்தேழுப்பி
சுதந்திர காற்றை
சுவாசிக்க இயலாமல்
மத தேசப்பிரிவால்
கலவர வெடிப்பில்
சினம்கொண்ட ஒருவனின்
துப்பாக்கியை நெஞ்சிலேந்தி
மரணத்தை முத்தமிட்டு
ஆண்டுதோற நினைவுதினங்களில்
புகைப்படங்களிலும்
ரூபாய் நோட்டுகளிலும்
புன்னகைமுகத்துடன்
வாழ்கிறார் நம்தேசப்பிதா
சுதந்திர தேசத்தின்
ஆட்சியாளர்களின் சுரண்டல்களாலும்
மதவாதிகளின் பிரிவுகளாலும்
மொழிக்குழப்பங்களாலும்
நதிநீர் பிரச்சனைகளாலும்
அரசியல் கட்சிகளாலும்
காரணமற்ற போரட்டவாதிகளாலும்
மேல்நாட்டு கலாச்சார மோகத்தாலும்
அரை நூற்றாண்டுகடந்தும்
தேசப்பிதாவின் கனவுதேசம்
இன்றும் கனவாகவே ....?

சுதந்திரம் ?ஆண்டுகள் தோறும்
நாடு முழுவதும்
ஆயுதம் ஏந்திய
காவலர்களின் கண்காணிப்பில்
கொண்டாடுகிறார்கள்
சுதந்திர நாட்டின்
சுதந்திர தினத்தை

Thursday, August 12, 2010

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi])

முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (obsessions) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார். திடாரென்று, கற்பனையான ஓர் உடல்ரீதியான குறைபாட்டைக் குறித்துக் கவலையுறுவார் என்றும் - ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேறொரு நிகழ்ச்சியாலோ, கவலையாலோ, விஷயத்தாலோ - முதல் கவலை போய்விடும் என்றும் அவர் விளக்கினார். பிடிவாதமும் ஆவேசமும் கொண்டு மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிற ஒரு பித்திலிருந்து, இன்னொரு பித்திற்கு, தாவித் தொடர்ந்து தவிப்பவராக அவர் காணப்பட்டார். அத்தகைய பித்துக்களிலிருந்து விடுபடவும், வெளிவரவும் - புத்தகங்கள் சொல்லும் வழிமுறைகளை ஆராய்ந்ததாகவும், பிரச்சினைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஏன் ஒரு மனோதத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்ததாகவும் கூட அவர் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ஏனோ தெளிவும், நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். முக்கியமான, தெளிவுண்டாக்குவதுபோல் தோன்றுகிற கலந்தாலோசனைகளுக்குப் பின் கூட, உடனடியாக அத்தகைய பித்துக்கள் அவரை ஆட்கொள்வதாக அவர் வருந்தினார். பித்துக்கள் பிறப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால், அவற்றுக்கு முடிவு கட்டி விட முடியுமா ?


காரணத்தைக் கண்டுபிடிப்பது விளைவிலிருந்து விடுதலை கொணர்கிறதா ? காரணத்தை அறிகிற கல்வியால் விளைவுகளை விலக்கிவிட முடியுமா ? போருக்கான பொருளாதார, உளவியற் காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம்; ஆனாலும், காட்டுமிராண்டித்தனத்தையும், சுய அழிவையும் ஊக்குவிக்கிறோம். சொல்லப்போனால், காரணத்தைத் தேடுவதில் நமக்குள்ள நோக்கமே அதன் மூலம் விளைவிலிருந்து விடுதலை பெறுகிற விருப்பம்தான். ஆனால், அந்த ஆசை சாத்வீகமான எதிர்ப்பின், தூஷித்தலின், கண்டித்தலின் மறுவடிவமே ஆகும்; எங்கே தூஷித்தலும், கண்டித்தலும் இருக்கிறதோ அங்கே புரிந்து கொள்வதும், அறிவதும் இருப்பதில்லை.

'அப்படியானால், ஒருவர் செய்ய வேண்டியதுதான் என்ன ? ' என்று அவர் கேட்டார்.

ஏன் மனமானது இத்தகைய அற்பமான, முட்டாள்தனமான பித்துக்களால் ஆளப்படுகிறது ? 'ஏன் ' என்று இங்கே கேட்பது, எதுவொன்றைப் பற்றியும் - நீங்களே தேடிக் கண்டடைய வேண்டிய - நீங்கள் சார்ந்திருக்கிற வாய்ப்பு இல்லாத - காரணத்தைத் தேடுவதற்காக அல்ல; 'ஏன் ' என்று இங்கே கேட்பது, உங்களின் சொந்த சிந்தனையை வெளிக்கொணரவும், பகிரங்கப்படுத்தவுமே. அதனால், ஏன் மனமானது இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகிறது ? மனமானது மேலோட்டமானதாக, ஆழமில்லாததாக, சிறுமையானதாக இருப்பதாலும், அதனால் தன்னைக் குறித்த கவர்ச்சிகளிலேயே சிரத்தை கொண்டிருப்பதாலும் தானே ?.

'ஆமாம் ' என்று பதலளித்த அவர், 'நீங்கள் சொல்வது உண்மைபோல் தோன்றுகிறது; ஆனால், முழுவதுமாக அல்ல; ஏனெனில், நான் ஒரு விளையாட்டுச் சுபாவமற்ற, வாழ்க்கையை முக்கியமாக எடுத்துக் கொள்கிற மனிதன். '

'இத்தகைய பித்துக்களைத் தவிர, உங்களின் சிந்தனை எதனால் நிரப்பப்பட்டிருக்கிறது ? '

'என்னுடைய தொழிலால் ' என்று அவர் சொன்னார். 'நான் ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறேன். முழு நாளும், சில நேரங்களில், இரவின் பின்பகுதி வரை, என்னுடைய சிந்தனையை என் தொழில் எடுத்துக் கொள்கிறது. நான் அவ்வப்போது படிப்பதுண்டு, ஆனால், என்னுடைய பெரும்பான்மையான நேரம் என் தொழிலுக்காகவே செலவாகிறது. '

'நீங்கள் செய்கிற தொழிலை நீங்கள் விரும்புகிறீர்களா ? '

'ஆம்; ஆனால், என்னுடைய தொழில் எனக்கு பூரணமான திருப்தியளிக்கவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும், நான் ஈடுபட்டுள்ளவற்றில் அதிருப்தியுடையவனாகவே நான் இருந்து வருகிறேன். ஆனால், எனக்கு இப்போது இருக்கிற கடமைகளின் பொருட்டு என்னால் இந்தப் பதவியை விடமுடியாது. மேலும், எனக்கு வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பித்துக்களும், என் தொழிலின் மீதான மனக்கசப்பும், பிறரின் மீதான வருத்தமுமே என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. நான் இனிமையானவனாக இல்லை. எதிர்காலத்தைப் பற்றி நாளும் வளர்கிற கவலையுறுபவனாக இருக்கிறேன். எனக்குள் அமைதி இருப்பதாகவே தோன்றவில்லை. நான் என் வேலையையும் கடமையையும் நன்றாக செய்கிறேன். ஆனால்... '

ஏன் நீங்கள் 'இது என்ன ? ' என்கிற நிதர்சனத்தை, உண்மையை எதிர்த்துத் துன்புறுகிறீர்கள் ? நான் வாழ்கிற இந்த வீடு சந்தடியும் சத்தமும் மிகுந்ததாகவும் - தூய்மையிழந்து அசுத்தமானதாகவும் - கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவை புழங்கிப் போய் அழகற்றதாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் இந்த இடமே அழகும் அமைதியும் இழந்து காணப்படலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, என்னால் இன்னொரு வீட்டிற்குப் போக இயலாமல், இங்கேயே வாழ வேண்டி வரலாம். எனவே, இங்கே நான் உறைவது - சம்மதம் பற்றிய, ஏற்றுக் கொள்வது பற்றிய விஷயம் அல்ல; யதார்த்தத்தை, நிதர்சனத்தை உணர்கிற, பார்க்கிற விஷயம் ஆகும். 'இது என்ன ' என்கிற உண்மையை நான் பார்க்காவிட்டால், அந்த பூ ஜாடி பற்றியோ, நாற்காலி பற்றியோ, சுவரிலே மாட்டப்பட்டிருக்கிற படத்தைப் பற்றியோ நினைத்து வருந்துகிற நோயுற்றவன் ஆகிவிடுவேன். அவை என் மனத்தை ஆக்கிரமிக்கிற, ஆட்டுவிக்கிற பித்துக்களாக மாறிவிடும்; அப்புறம், பிறரை எதிர்த்தும், என் தொழிலை எதிர்த்தும் என்றெல்லாம் எனக்குள் மனக்கசப்புகள் பிறக்கும். இவை எல்லாவற்றையும் அப்படியே இங்கேயே விட்டுவிட்டு, நான் புதிதாகவும் தொடங்கலாம் எனில் அது முற்றிலும் வேறான விஷயம். ஆனால், என்னால் அது முடியாது. 'இது என்ன ' என்கிற நிதர்சனத்தை எதிர்த்துக் கலகம் செய்வது நல்லதல்ல. 'இது என்ன ' என்கிற உண்மையை அங்கீகரிப்பது கம்பீரமான மனத்திருப்திக்கோ, வலியைக் குறைக்கிற இளைப்பாறலுக்கோ அழைத்துச் செல்வதில்லை. 'இது என்ன ' என்கிற நிதர்சனத்திற்கு, உண்மைக்கு நான் இணங்கி வளைந்து கொடுக்கும் போது, அதைப் பற்றிய புரிந்து கொள்ளுதலும் அறிதலும் நிகழ்வது மட்டுமல்ல; மேலோட்டமான புற மனத்திற்கு ஒருவகையான அமைதியும் பிறக்கிறது. மனத்தின் மேற்பகுதியானது - புறமனமானது - அமைதியடையாதபோது, அது - நிஜமான அல்லது கற்பனையான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்களுக்கு இடம் கொடுக்கிறது. அது, சில சமூக சீர்திருத்தங்களிலோ, குரு, இரட்சகர், சடங்கு போன்ற மதமுடிவுகளிலோ சிக்கிக் கொள்கிறது. புற மனமானது அமைதியாக இருக்கும்போதே, மறைந்திருக்கிற, ஆழ்மனம் - அக மனம் - தன்னைத் தானே வெளிப்படுத்தும். மறைந்திருக்கிற அக மனம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற மனமானது பித்துக்கள், கவலைகள் ஆகியவற்றால் சுமையேற்றப்படும்போது அகமனம் வெளிப்படுதல் சாத்தியமாகாது. எனவே, அமைதியற்ற சச்சரவுகளிலும், ஆவேசங்களிலும், எழுச்சிகளிலும், புறமனமானது தொடர்ந்து பாதிக்கப்படும்போது, புற மனத்திற்கும், அக மனத்திற்கும் முரண்பாடுகளும் பகையும் தோன்றுவது தவிர்க்க இயலாதது. இந்த முரண்பாடுகள் தொடர்கிற வரை, தீர்க்கப்படாத வரை, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் வளர்கின்றன. சொல்ல போனால், பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் எல்லாம் நம்முடைய முரண்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே ஆகும். சில வகையான தப்பித்தல்கள் சமுதாயத்திற்கு வெளிப்படையாக அதிகமாய்த் தீங்கிழைக்கின்றன என்றாலும் கூட, எல்லாத் தப்பித்தல்களுமே ஒத்த தன்மையுடையவை, ஒரே மாதிரியானவை தான்..

எப்போது ஒருவர் பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்தின் முழுமையான இயக்கத்தை அல்லது பிரச்சினையின் முழுமையான இயக்கத்தை உணர்ந்து அறிகிறாரோ, அப்போது தான் பிரச்சினையிலிருந்து பூரணமான விடுதலை காண முடியும். முற்றுமுணர, பிரச்சினையைக் கண்டிப்பதோ, நியாயப்படுத்துவதோ கூடாது. உணர்கிற நிலை - அறிவுடைய நிலை - என்பது தேர்ந்தெடுக்கப்படாததாய் இருக்க வேண்டும். அப்படி முழுவதும் உணர்வதற்கும் அறிவதற்கும் மிக்க பொறுமையும், நுண்ணிய உணர்வுகளை அறியும் நுட்பமும் தேவைப்படுகிறது; பேராவலும், தொடர்ந்த கவனமும் தேவைப்படுகிறது. அவற்றினாலேயே, சிந்தனையின் முழுமையான இயக்கத்தைக் கூர்ந்து கவனிக்கவும், புரிந்து கொள்ளவும், அறியவும் முடியும்.

Monday, August 9, 2010

கூட்டுக்குடும்பம்வம்சப் பெருமையும்
மூத்தவர்கள் இடும்
கண்டிப்பு எல்லைகளும்
உறவுக் கூட்டங்களின்
அன்பின் நச்சரிப்பும்
சுதந்திர வாழ்கையை
 பறிக்கிறது என்று
கசப்பு வார்த்தைகளால்
உறவுகளை உடைத்து
குடும்ப சொத்தை
பாகம் பிரித்து
மனச்சேராமையால்
கூட்டுக்குடும்ப படிதாண்டி
தனிக்குடித்தனத்தில்
தலைவனற்ற
பகல் இரவு தருணங்களில்
கற்ப்பு தாங்கிய உடலையும்
உடமையும் பொருளும்
தாங்கிய வீட்டையும்
மரண பயத்துடனும்
நித்திரை இன்றி
மன சஞ்சலத்துடன்
புன்னகை மறந்து
உதவிக் குரலுக்கு
செவிதாழ்த்த ஆள்ளற்றும்
அவசர வேளைகளில்
ஆதரவற்றும்
நாழிகை கடத்தி
வாழுகிற தருணங்களில்
கூட்டு உறவுகளின்
பாச வேலியின்
பாதுகாப்பின் உன்னதத்தை
உணர்த்துகிறது உள்மனம்

Sunday, August 8, 2010

கற்ப்பில் சிறந்தவர்கள்
மலரா மொட்டுக்களை
தன் இச்சைக்காக
பறிப்பவர்களும்
உறவுகள் இருந்தும்
உடல் பசிக்காக
மாற்றான் உறவுகளை
களவு செய்வோரும்
காம லீலைகளுக்காக
காதலின் பெயரால்
காதலை சிதைப்பவர்களும்
நீதி மன்றங்கள் தேடி
உறவுகளை முறித்துக்கொண்டு
மாலைகள் பல மாற்றி
புது உறவுக்குள் நுளைவோரும்
சமுதாயத்தின் மான்ய முகமூடிக்குள்
தங்களை ஒளித்துக்கொண்டு
உறவுலளாலும் சமுதாயத்தாலும்
உறவுகளற்று ஒதுக்கப்பட்டு
பிழைக்க வழியின்றி
சிவப்பு வீதிகளில்
சுகம் நாடிவருவோர்க்கு
நான்கு சுவருக்குள்
உடலை இரவல்கொடுக்கும்
தாசிப் பெண்மைகளை நோக்கி
மேடைகள் ஏறி
இவர்கள் தான் தேசத்தின்
கலாச்சாரத்தை சீர்குலைப்பவர்கள்
என்று கற்பின் மகத்துவம்
பேசும் மானியர்களே
கற்ப்பில் சிறந்தவர்கள்
யாரென்று சிறிது
சிந்தித்துப்பாருங்கள்

நாகரீக முரண்பாடுஆடையின்றி திரிந்த
ஆதிமனிதர்களுக்கு
மதி அவர்களின்
வெட்கத்தலங்களை
காட்டிக்கொடுத்ததால்
மர இலைகளிலும்
மிருக தோல்களிலும்
ஆடை சமைத்து
உடல் போர்த்தி
நாகரீகம் கண்டான்
ஆதிமனிதன்
போர்த்திய உடைமைகளின்
அளவுகள் குறைத்து
வெட்கத்தலங்களை
விழிகள் பார்க்கும்
காட்சி பொருளாக்கி
புதுமை நாகரீகம்
பேசுகிறார்கள் இன்றைய
புதுமை மனிதர்கள்

இரவல்
வறுமையால்
உணவின்றி பசியால்
வாடுகிற பிள்ளைகளுக்காக
வாரிசற்ற செல்வந்தர்களுக்கு
தன் வாரிசுகள்
உயிர்த்தெழுந்த கருவறையை
இரவல் கொடுக்கிறாள்
ஏழைத் தாய்

Thursday, August 5, 2010

பொறாமை

பொறாமை (Jealousy)
(மூலம்: வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் - தொகுப்பு: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on Living - Volume: I - J. Krishnamurthi])

எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில், அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன. தாயின் அனுமதியோ, வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், 'இங்கே என்ன நடக்கிறது ' என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார். எல்லாக் குழந்தைகளையும் போலவே, சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார். ஒளி படைத்த அவர் கண்கள் - அழுவதா, சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று - என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது. குறையேதும் இல்லாத தூய்மையும், அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் - எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல - தவிர்க்க இயலாதவை. ஏனெனில், அவர் பெறப்போகும் கல்வியும், அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் - வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும். புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு, இவ்வுலகில் மிகவும் அரிதானது. அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே - நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் - எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை. புகையானது எங்கும் விரவி வியாபிக்கும்போது, தீயின் சுடர் அணைந்து போகிறது. அன்பு என்கிற தீச்சுடர் இன்றி வாழ்க்கை மழுங்கியும் சோர்ந்தும் போகிறது. அன்பெனும் சுடரின்றி, வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. ஆனால், இருள் சூழ்ந்த புகையினூடே, தீயின் சுடர் இருக்கவோ, நிலைக்கவோ இயலாது. புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தபப்ட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்ஙனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.


'அன்பும் வெறுப்பும் இணைந்திருக்க இயலாதா ? பொறாமையானது அன்பினைச் சொல்லுகிற அடையாளம் தானே! நாம் கைகோத்து மகிழ்கிறோம்; அடுத்த நிமிடமே வசவுகள் பகிர்கிறோம்; கடுமொழிகளால் பரஸ்பரம் சுட்டுக் கொள்கிறோம்; ஆனால், விரைவிலேயே எல்லாம் மறந்து, ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்து கொள்கிறோம். நாம் சண்டையிடுகிறோம்; பின்னர் முத்தமிட்டு சமரசமும் சமாதானமும் ஆகிவிடுகிறோம். இவையெல்லாம் அன்பும், அன்பின் சமிக்ஞைகளூம் இல்லையா! பொறாமை என்பதே அன்பினை வெளிப்படுத்தப் பிறக்கிற ஒரு மொழிதானே! இருளும் ஒளியும் போல, பொறாமையும் அன்பும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததுதானே! துரிதமான கோபமும், இச்சை மொழிகள் நிறைந்த கொஞ்சலும் அன்பின் முழுமை இல்லையா ? வெள்ளம் பெருக்கெடுத்து, முரட்டுத்தனமாய்ப் பாய்கின்ற ஆறுதான், சலனமின்றி நடக்கின்ற நதியாகவும் இருக்கிறது. இரவில், நிழலில், ஒளியில் என்று எந்தச் சூழலில் பாய்ந்தாலும், நடந்தாலும் அது நதிதானே! இவையெல்லாம் தானே நதியின் இயல்பும் அழகும் ஆகும்! '

அன்பு என்றும் நேசம் என்றும் நாம் அழைக்கிறோமே, அதுதான் என்ன ? இந்தப் பொறாமையும், காமமும், கடுமொழிகளும், கொஞ்சலும், கைகோத்துக் கொள்ளுவதும், பிணங்கிச் சண்டையிடுவதும், பின்னர் இணங்கிச் சமரசம் ஆகுவதும் நிறைந்த தளமும் புலமும் தானா அன்பு ? அன்பு என்கிற பெயரால், நாம் செய்கிற நிஜங்களும், செய்கைகளும் இவை. கோபமும், கொஞ்சலும் - அன்பு என்கிற புலத்தில் - நிதந்தோறும் நாம் காணுகிற நிதர்சனங்கள். கோபமும் கொஞ்சலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட செய்கைகளுக்கிடையே ஓர் உறவையும் தொடர்பையும் உருவாக்க நாம் விரும்புகிறோம். அல்லது, இத்தகைய செய்கைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பொருள் காண முயல்கிறோம். ஒரு தளத்தில் நிகழ்கிற ஒரு செய்கையை வைத்து, அதே தளத்தில் நிகழ்கிற மற்றொரு செய்கையை கண்டிக்கவோ, நியாயப்படுத்தவோ முயல்கிறோம். அல்லது, ஒரு தளத்தில் நாம் காணுகிற நிதர்சனத்தோடு, அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ இருக்கிற மற்றொரு நிதர்சனத்தைத் தொடர்புறுத்தி இரண்டுக்குமிடையே ஒரு பொது உறவினை உண்டாக்க முயற்சிக்கிறோம். ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு நிஜத்தையும் தனித்தனியே எடுத்து ஆராயாமல், அவற்றுக்கிடையே ஒரு பரஸ்பர உறவினையே நாம் உருவாக்க விரும்புகிறோம். நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? அதே தளத்திலோ, அத்தளத்திற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை ஊடகமாகப் பயன்படுத்தாத போதே, ஒரு செய்கையை, அந்தச் செய்கையின் நிஜப் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதே புலத்திலோ, அதற்கு அப்பாற்பட்டோ உள்ள மற்றொரு செய்கையை, புரிந்து கொள்வதற்கான ஊடகமாகப் பயன்படுத்தும்போது, அது முரண்பாடுகளையும், குழப்பத்தையுமே உருவாக்குகிறது. ஆனாலும், நாம் ஏன் ஒரு தளத்தின் பெயரால், பல்வேறு செய்கைகளையும் அவற்றின் நிஜத்தையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் ? ஒரு செய்கையின் முக்கியத்துவத்தை வைத்து, மற்றொரு செய்கையை விளக்கவோ, ஈடு செய்யவோ ஏன் முயல்கிறோம் ?

'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக் கிரகித்துக் கொள்ளத் தொடங்குகிறேன். ஆனால், நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் ? '

நாம் ஒரு செய்கையை, அதன் உண்மையை, எண்ணம் என்கிற திரைமூலமாகவோ, நினைவு என்கிற வடிகட்டி மூலமாகவோ புரிந்து கொள்கிறோமா ? உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்த காரணத்தால், நான் பொறாமையைப் புரிந்து கொள்கிறேனா ? பொறாமை நிஜமானது என்பது போல, உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததும் நிஜம். ஆனால், பொறாமையையும், அதன் இயக்கத்தையும் உங்களுடன் கைகோத்துக் கொண்டிருந்ததை நினைவில் வைத்திருக்கிற காரணத்தால் நான் புரிந்து கொள்கிறேனா ? நினைவானது புரிந்து கொள்வதற்கான உபகரணமா ? நினைவு ஒப்பிடுகிறது; நினைவு மாறுகிறது; நினைவு மாற்றுகிறது; நினைவு கண்டிக்கிறது; நினைவு நியாயப்படுத்துகிறது; நினைவு அடையாளம் காணுகிறது; ஆனால், நினைவு எதையும் புரிந்துகொள்வதற்கு உதவ முடியாது. அன்பு என்கிற தளத்தில் நம்முடைய செய்கைகளையும், அவற்றின் நிஜத்தையும் முன்னறுதியிட்ட எண்ணங்களுடனும், முடிவுகளுடனுமே நாம் அணுகுகிறோம். பொறாமையை, எந்த முன்முடிவும் இன்றி, அதன் இயல்பில் எடுத்துக் கொண்டு நாம் அமைதியாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால், பொறாமையை, பொறாமை சார்ந்த செய்கையை, நம்முடைய வசதிக்கும், முடிவுக்கும் ஏற்ப திரித்துப் பொருள் காண விரும்புகிறோம். பொறாமையை, அதன் இயக்கத்தை, நிஜத்தை நாம் புரிந்து கொள்ள விரும்பாததே, நம்மின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் ஆகும். ஏனெனில், பொறாமை உண்டாக்குகிற கிளர்ச்சியும், எழுச்சியும் கூட கொஞ்சலால் பிறக்கின்ற கிளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சமம்; ஆனால், பொறாமையினால் பிறக்கின்ற கிளர்ச்சியானது, பொறாமை கொண்டுவருகிற வலியும், அசெளகரியமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால், அன்பு என்கிற தளத்திலே, முரண்பாடுகளூம், குழப்பமும், பகையும் பிறக்கிறது. எனவே, அன்பானது என்ன ?அன்பானது ஓர் எண்ணமா, பாவனையா, கிளர்ச்சியா, தூண்டுதலா அல்லது பொறாமையா ?

'உண்மையானது மாயையையும் சேர்த்தது தானே! இருளானது தன்னுள்ளே ஒளியை உள்ளடக்கியதுதானே! நம்முடைய கடவுளர்கள் கூட இத்தகைய செய்கைகளால்தானே தளைக்கப்பட்டுள்ளனர் ? '

இவையெல்லாம், செல்லத்தகாத, வெறும் எண்ணங்களும், அபிப்ராயங்களூம், தீர்மானங்களுமே ஆகும். இத்தகைய எண்ணங்கள், உண்மைநிலையை உள்ளடக்குவதோ, வெளிப்படுத்துவதோ இல்லையாதலால், பகையையே வளர்க்கின்றன. வெளிச்சம் இருக்கிற இடத்திலே இருள் இல்லை. இருளானது ஒளியை ஒளித்து வைக்க இயலாது. இருளானது ஒளியை உள்ளடக்கியது என்று சொன்னால், அங்கே வெளிச்சமே இல்லை என்று பொருள். பொறாமை இருக்கிற இடத்திலே அன்பு இல்லை. முனஅறுதியிட்ட என்ணங்களும், அபிப்ராயங்களூம், அதனால் பிறக்கிற செய்கைகளும், அன்பினை உள்ளடக்கவோ, வெளிப்படுத்தவோ முடியாது. பகிர்ந்து கொள்வதற்கு உறவு மிக அவசியமாகிறது. அன்பானது எந்த எண்ணத்தையும், அபிப்ராயத்தையும் சார்ந்தது அல்ல; எனவே, முன்னறுதியிட்ட எண்ணங்களோ, அபிப்ராயங்களோ அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ உதவாது. புகையற்ற, தெளிந்த தீச்சுடரே அன்பாகும்.

Tuesday, August 3, 2010

அன்பின் மரணம்கருவறை  நீர்குடத்தில்
அலுங்காமல் குலுங்காமலும்
தவழும்வரை மார்புச் சூட்டிலும்
இடமளித்த தாயவளுக்கு
தலைசாயித்து உறங்க
மாளிகை வீட்டில்
ஆறடி இடமற்று
மாதக்கூலி கொடுத்து
அன்னையர் விடுதிகளில்
தஞ்சம் கேட்க்கிறார்கள்
கருணையற்ற பிள்ளைகள்

Monday, August 2, 2010

மலர்களின் வாழ்க்கைபிரசாத பூ
**************

*தெய்வத் திருவடியில்
அர்ச்சனை பூக்கள்

விதவை
***********
*அவள் தோட்டத்தில்
வளர்த்த மலர்கள்
சூட ஆளின்றி
வாடுகிறது

மலர் அஞ்சலி
***************
* இறந்தவர்களுக்கு
உறவுகளின் நினைவு
பரிசு

மரண ஊர்வலம்
******************
*வீதியெல்லாம் சிதறி
உயிரற்று கிடக்குகிறேன்

கொண்டைப் பூ
*****************
*ஒரு மலர்
மலர் சூடுகிறது

வாசனை
***********
*இறந்தும் கூட 
உயிர் இருக்கிறது

*மலர்கள்
************
*புன்னகை சூடுவதால்
மனிதர்கள் அழகு
பொன்னகை சூடுவதால்
பெண்கள் அழகு
என்னைச் சூடுவதால்
ஈரழகு

*மங்கைகளை மயக்கும்
ஆண்களின் ஆயுதம்

Sunday, August 1, 2010

நானும் ஒரு தாய்தான்ஐவிரு மாதங்கள்
உன் கருவறையில்
உயிர் சுமந்து
மழலைசெல்வங்களை
ஈன்றெடுத்து
தாய்மை மார்தட்டும்
பெண்மைகளே....
நானும் ஒரு தாய்தான்
என் இதயக்கருவரையில்
என்னவளின் காதலை
இறுதிவரை சுமப்பதால்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...