Wednesday, September 29, 2010

பணம்

முடங்கி கிடந்தால்
என்னை அடைவது கடினம்
ஊனத்தைக் காட்டி
கையேந்தி பிச்சைகேட்டு
என்னை இழிவுபடுத்தாதே
உன் உழைப்பைகொண்டு
உரிமையோடு
என்னைத் தேடிக்கொள்
உனக்கும் உறவுக்கும்
பேதமின்றி   அளவோடுசெலவிடு
ஏந்தும் கரங்களைவிட
கொடுக்கும் கரம் உயர்ந்தது
பொன்னாக சேர்த்து
பூட்டி வைக்காதே
மண்ணை வாங்கி
பயிரிட்டு உணவளி
நான் நிரந்தர இடமற்றவன்
சிறைபிடிக்க முயலாதே
உண்ணும் உணவு
அமிர்தமானால்  உடலுக்குகேடு
தேங்கிய நீரும்
சீழ் துறுநாற்றமாகும்
என்னை ஆளநினை
உன்னை ஆளவைக்காதே
உள்ளத்தில்    அமைதியற்ற
தருணமே  மிஞ்சும்

கருத்த பெண்
வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்
கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்
காதலியை தேர்ந்தேடுக்குவதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்
உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்
பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஓன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கு
வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்
அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்
என்னவனே பெண்மையின்
குணங்களை நேசி
வண்ணங்களை அல்ல

Tuesday, September 28, 2010

ஆண்மையே
மாலையிட்ட மறுகணமே
உன் விரல் பிடித்தேன்
தந்தை  தந்த பொருளும்
தாய் கொடுத்த உடலையும்
காலம் சமைத்த
என் பருவத்தையும்
மணச் சீதனமாய்
இல்லம் புகுந்தேன்
இரவுகளில் நீ இன்புற
என்னை உணவாகினாய்
உன் ஆண்மை தந்து
தாய்மை பெயர்கொடுத்தாய்
உனக்கும் உன் உறவுக்கும்
கட்டளைக்கு இணங்கி
அயராத பணிவிடைகள்
சில வேலிகள் இட்டு
சட்டங்கள் இயற்றினாய்
கடுத்த கோபங்களையும்
சிறிய புன்னகைகளையும்
அவ்வப்போதுஎனக்குள் விதைத்தாய்
பண்டிகைகளில் புதுத்துணி
சுப நிகழ்ச்சிகளில்
வெளிப் பயணம்
ஈன்ற பிள்ளைகளின்
கடமைப் பேணுதல்
பொழுதுகள் விடிந்தும் அடைந்தும்
காலங்கள் நகர்ந்தன
இன்று நாளை என்று
என்றாவது ஒருநாள்
என்னிடத்தில் என்
உணர்வுகளையும் உரிமைகளையும்
கேட்டறிவாய் என்று
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
உடல்சுருங்கியும் முடிநரைத்தும்
என் காத்திருப்பு தொடர்கிறது
சபைகளிலும் மேடைகளிலும்
பெண்ணியம் பேசுகிறாய்
துணையிடம் அதை மறுக்கிறாய்
பொறுமை இழந்த பெண்மைகள்
உரிமைக்கொடி உயர்த்தினால்
எம் இனத்தை இழிவுபடுத்துகிறாய்
சிந்திக்கும் ஆண்மையே
பெண்மையும் உன் இனம்என்பதை
ஏன் மறந்துபோகிறாய்

அகத்தூய்மை

களங்கமுள்ள மனதுடன்
உறவைப் பரிமாறும்
ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுகிறோம் என்றெண்ணி
அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொள்கிறார்கள்
பிள்ளைகளின் பசிமாற்ற
பணத்திற்கு உடலைவிற்க்கும்
தாசியின் உடலில்
களங்கம் இருந்தாலும்
உள்ளத்தூய்மை இருக்கும்
உறவுக்குள் நுழையும்
மனித மனங்களே
அகத்தூய்மை செய்துகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை சிறக்க

Monday, September 27, 2010

பெண்மையின் தாகம்
உறங்கி இருந்த
என் பெண்மையை
உன்வருடல்களால்
தட்டி எழுப்பி
சிலதொரு நொடிகளில்
உன் உணர்ச்சிகளை
வெறுமனே கொட்டிவிட்டு
திரும்பி படுத்துக்கொள்கிறாய்
விருட்டேழுந்த பெண்மையோ
தாகம் தணியாமல்
மீத இரவின் நாழிகைகள்
சிந்தை பேதித்து
உறக்கம் துலைத்து
உன் மறு விழிப்பின்
வருடல்களுக்காக
விழித்திருக்கிறது
பெண்மையின் ரணவேதனையை
எப்போது உணரப்போகிறாய்
என்னவனே......

Sunday, September 26, 2010

மலரின் கள்ளத்தனம்
பருவம் எய்த என்னவளுக்கு
என் ஆண்மை புணரவும்
வம்சத்தை தளிர்க்கவும்
என் இதழ் தேடி
தன் பசியாற்றும்
வண்டுகளின் பாதங்களில்
கள்ளத்தனமாய் அனுப்புகிறேன்
பருவம் சமைத்த
மகரந்தத்தை

Saturday, September 25, 2010

பால்ய நட்புபள்ளி மதிலுக்குள்
முதல் சந்திப்பில்
தளிரிட்ட உறவு

ஊர்த்தெருக்களில்
நித்தமும் துடர்ந்த
விளையாட்டு தருணங்கள்

கூட்டளியைத் தேடிய
வீட்டு தரிசனம்

இவன் என் சேக்காளி
உறவுகளிடம் அறிமுகம்

வரவுகள் தொடர்ந்த
இரு வாசல்கள்
நல்லுறவை பிணைத்தது

பால்ய நாட்களில்
நித்திரைகளில் மட்டும்
தனிமைகளின் வரவுகள்

உறவுகளின் நிகழ்ச்சிகளில்
உரிமைப் பங்கெடுப்பு

சின்னசின்ன சண்டைகள்
உறவுகளின் சமரசம்

பட்டியலில் அடங்காத
வரவும் செலவும்

காலத்தின் ஓட்டம்
தூரப் பயணங்கள்
கடித இணைப்பு
வருஷங்களின் இடைவெளி
ஓர் இரு சந்திப்பு

வரம்பற்ற கும்மாளத்துடன்
சுற்றித்திரிந்த நாட்கள்
மனப் புத்தகத்தில்
அழகிய குறிப்பு

நாட்களை தின்ற
வாழ்க்கை பயணம்
கடந்து செற்றது
விசித்திர முகங்கள்

பக்குவ பெட்டியில்
அனுபவங்களின் சேகரிப்பு
சிறிது சிறுதாக அகன்று
பிரித்தக் காட்டியது
நட்பையும் காதலையும்

பெண்மையின் வரவு
புதிய துணை
மணப்பந்தல் வழி
குடும்ப பயணம்

உழைப்பைத் தேடியும்
உறவை பேணியும்
நிற்காத ஓட்டம்

இளைப்பாறும் தருணம்
அவ்வப்போது வந்துபோகும்
பால்ய நட்பின் நினைவுகள்

எனக்குள் என் பகைவன்

பால்யம் முதல்
இன்றுவரையிலான
அவனது செய்கையால்
காயங்கள் அவமானங்கள்
சீர்கெட்ட பெயர்கள்
தொடரும் கண்ணீர்கள்
ஒவ்வொரு உருக்களில்
அவ்வப்போது வெளிப்பட்டு
காயமடைந்து வலிகளுடன்
தலைதாழ்த்தி நிற்கிறான்
தன் அடக்குமுறைகளில்
பணிந்து நின்று
நன்மைகள் அறிவுறுத்தும்
கபடமற்ற தோழனை
சுய அனுபவங்களால்
உயர்வுக்கு வித்திட்ட
எனக்குள் என் பகைவனை
துரத்தவும் இயலவில்லை
ஆதரிக்கவும் முடியவில்லை

இது சுடும்
இருளை விரட்டிய
ஒளிச் சுடர் விசித்ரம்
முதல் தூண்டுதல்
விரல் சுடுபட
வலியின் அழுகையில்
முதல்முறையாக
விழித்துக் கொண்டான்
தவழும் குழந்தையில்

Thursday, September 23, 2010

ஊழல்

தாய்க்கு வாங்கும் சேலையிலும்
பிள்ளைகளின் பணம்பதுக்கல்
தரமற்ற ஆடை கிழிந்ததால்
ஊரார் நகைத்து
கைகொட்டி சிரிக்க
வீதியில் நிலைகுலைந்து
தன் மானம்மறைக்க
இயலாமல் திண்டாடுகிறாள்
பெற்ற தாய்

Monday, September 20, 2010

என் இனிய தோழி
ஒரு 
சிறு புன்னகை
தயங்கிய வார்த்தைகள்
மெல்லிய பெயர் அறிமுகங்கள்
அலுவலக முதல்நாள்

தெரிந்ததை 
சொல்லிகொடுத்தாள்
தவறுகளை சுட்டிகாட்டினாள்
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்

உணவு இடைவெளி
பரிமாறப் பட்டது
கொண்டுவந்த உணவும்
உறவுக் கதைகளும்

அறிவுரைகள் சொல்வாள்
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில்
என்னையே வியக்கவைத்தாள்

அவசர தருணங்களில்
உதவிக்கை நீட்டினாள்
தோள்பிடித்து உரையாடுவாள்
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்

சில கருத்துகளை
விவாதித்துக் கொள்வாள்
சிறிதாய் சண்டையிடுவாள்
தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்

வாழ்த்துச் சொல்லி
பிறந்தநாளை நினைவூட்டுவாள்
பண்டிகை தினங்களில்
கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள்
பரிசுகளுடன் திரும்புவாள்

கணவனின் கட்டளைப்படி
பிள்ளைப்பேருக்காக
அலுவலகம் விட்டு
கண்ணீரில் விடைபெற்று
சில மாதப்போக்கில்
மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள்
தன்பிள்ளையின் புகைப்படத்தை

காலம் கடந்தது
நிறையப்பேர் வந்துபோனார்கள்
இன்றுவரையிலும் அமையவில்லை
உன்னைப்போல் ஒருதோழி

 
-தோழி ஷேர்லிக்காக

பெண்ணியம்
ஈன்றெடுக்கும் தாயாக
அன்பைகாட்டும் சகோதரியாக
தோள்கொடுக்கும் தோழியாக
உறவைப்பங்கிடும் மனைவியாக
வம்சம் தளிரிடும் மகளாக
எத்தனை பெண்அவதாரங்கள்
சில கரும்புள்ளி பெண்களால்
சமூகம் தூற்றப்படுகையில்
உள்மனம் காயப்பட்டு
மௌனமாக அழுகிறது
மேண்மை பெண்ணினம்
பயிர்களுக்கு இடையே
களைச் செடிகள்
இயற்க்கையடி பெண்ணே
பெண்மை வெண்ணிறத்தில்
கரும்புள்ளிக் கறைகளா
துயர் கொள்ளாதே
முடங்கி கிடப்பதாலே
அடக்கி ஆளுகிறார்கள்
விழித்தெழுந்து புறப்படு
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்
விலங்குகளை உடைத்தெறி
உரிமைகளை பெற்றிடு
உறவுகளை மதித்திடி
நல்வேலிக்குள் உலவிடு
சாதனைகள் படைத்திடு
சரித்திர ஏட்டில்
உன்பெயர் பதித்திடு
உடையின் நாகரீகத்தை
உன் உயர்வில் காட்டு
வீட்டை கடந்து
நாட்டையே ஆண்டாலும்
பெண்மையை மறந்திடாதே
உனைத்தூற்றுவூர் சிலர்தான்
போற்றுவூர் தரணியெங்கும்

Sunday, September 19, 2010

பாட்டி

*பாட்டியின் கதை
அம்மாமடி தலையணை
ஆழ்ந்த உறக்கம்
பழைய நினைவு


*மகனோட பிள்ளைக்கு
உரிமையோடு வச்சபெயரை
ஒருநாளும் கூப்பிடமாட்டாள்
தாத்தாவின் பெயர்


*இவதான் உன்பொண்டாட்டி
பஞ்சிலே நிச்சயம் செய்தாள்
அத்தைமகளை காட்டி


*புதுத்துணி உடுத்தி
அழகுபார்த்தாள் அம்மா
திருஷ்டிசுற்றிப்போட்டாள் பாட்டி


*பேரப்பிள்ளை அழுதால்
ஊருக்கு முன்னால்
ஞாயம் கேட்பாள் பாட்டி


*ஊர்கதை பேசினாலும்
தம் உறவுகளை
விட்டுகொடுக்கமாட்டாள் பாட்டி


*சீர்குலைந்தது திரியிது
குடும்ப உறவுகள்
மூத்தவர்கள் இல்லாத வீடு


*வெறிச்சோடி கிடக்குது
வீட்டுத் திண்ணை
முதியோர் இல்லத்தில் பாட்டி

Saturday, September 18, 2010

புரிதல்
ஒருவர்கொருவர்
புரிந்து கொள்வதிலேயே
காலத்தின் நாழிகைகடந்து
பருவம் உதிர்ந்துபோகிறது
மிருதுவான புரிதலில்
வாழ்க்கை இனிக்கிறது
சில அவசரப்புரிதலால்
நஞ்சாக கசக்கிறது
மீதமுள்ள வாழ்க்கை

காந்தம்
*இரும்புத் துகள்களை
தன் விசைக்கேற்ப
இழுத்துச் செல்லும்
காந்தம் போல்
கடல்கடந்தும்
என் நாழிகைகளின்
ஒவ்வொரு நிமிஷங்களின்
சலனங்களைக் கூட
தொலைவில் இருந்து
நகர்த்துகிறாய்  பெண்ணே
உன்காதல் காந்தத்தால்


*ஒரே துருவங்களை
இணைப்பதில்லை காந்தம்
உணர்கிறேன் பெண்ணே
இருதுருவமான நாம்
இல்லறத்தில் இணைந்து
இன்புற்ற தருணங்களில்

Thursday, September 16, 2010

ஆசிர்வாதம்

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்

நேற்று அவன்
இன்று இவன்
நாளை நீ
என சிறந்தவர்களாக
சுழல்வதை பார்

படைப்பில் சிறந்தவன் நீ
உன்னை நீயே தாழ்த்துவதா
படைத்தவனுக்கு மட்டுமே
தாழ்த்த வேண்டிய
தலைசிறந்த தலைமகுடத்தை
மனிதனுக்குமனிதன் தாழ்த்தகையில்
புறக்கணிக்கப் படுகிறான்
இறைவன்

Wednesday, September 15, 2010

அக்கரை இக்கரை வாழ்க்கை

ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் அவழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேசச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை

Monday, September 13, 2010

மேடைக் கூத்தாடி

முச்சந்தி வீதியில்
தோல் செண்டையடித்து
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
ஓலக் கொட்டகையில்
ஆறடி மேடையமைத்து
இதிகாசக் கதைகளுக்கு
முகச்சாயம் பூசி
கூடிநிற்கும் மக்கள்பார்க்க
ஆடிடும் பாடியும் கூத்திட்டு
வயிறு நிரப்பி வந்தவர்கள்
காலம்போன போக்கிலே
வெள்ளப்பய கொண்டுவந்த
வெள்ளித்திரையில நுழைஞ்சு
பொய்யான  காட்சிகள
நெசமாகக் காட்டி
ஊருப்பய நெஞ்சுக்குள்ள
உத்தமர்களா ஏறிநின்னு
வீதிக்கொரு கூட்டம்சேர்த்து
ஊர்மக்க காசுல
உல்லாசமாய் உலவிகிட்டு
நானா நீனா பெரியவன்
உள்ளுக்குள்ள சண்டைபோட்டு
ஆளுக்கொரு கொடிபிடித்து
வீதிநெடுக கைகூப்பி
அரியணை இருக்கைதேடி
கூட்டமாய் புறப்படுது
மேடைக் கூத்தாடிகள்
என்றோ ஒரு காலத்துல
நல்லவங்க ஆண்டதை
நினைவுல வச்சிக்கிட்டு
மதிகெட்ட மக்களும்
கோஷம்போட்டு பின்னாலே ......

Sunday, September 12, 2010

பொதுக் கழிப்பறை

*பொதுக் கழிப்பறையாக
கற்புத் தலங்கள்
புதிய கலாச்சாரம்


*சுடும் வெயிலில்
நிழலுக்காக ஓடுகிறான்
மரம் வெட்டுபவன்


*குருடனின் பிச்சைப்பாத்திரத்தில்
காசு திருடுகிறான்
பார்வை உள்ளவன்


*மனிதர்களின் கர்வம்
உடைந்து போகிறது
இயற்கை அழிவு


*துரிதஉணவுக் கலாச்சாரம்
பெருகி வருகிறது
இளமைச் சாவுகள்


*காதலனின் பரிசு
அநாதை பிள்ளையாய்
மழலை காப்பகத்தில்

சுயம் மறந்தவள்

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்
வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்
கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்
கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்
பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்
இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்
வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

Thursday, September 9, 2010

அன்பின் பெண் உருவம் (மனைவி)

தலையில் முக்காடிட்டு
கூந்தலில் மல்லிகைசூடி
இதழில் புன்னகையுமாய்
மங்கள முகத்துடன்
நிச்சயத்திற்கு முன்
அனுப்பிய புகைப்படத்தில்
எத்தனை முறை எடுத்துப்
பார்த்தேன் எனகணக்கில்லை
வெற்றுஇடமான நெஞ்சுக்குள்
சருட்டென நுழைந்துசென்றாள்
மறுநாள் சொல்லிவிட்டேன்
அவளைப் பிடித்துருக்கென்று
நிச்சயம் நடந்தது
எனக்குள் காதலும்பிறந்தது
மூன்றுமாத இடைவெழி
அவளுடனாக காதலை
அதிகரிக்கச் செய்தது
குரல்கேட்கும் ஆசையால்
கைபேசியில் அழைத்து
வார்த்தைகள் இன்றி
திணறினோம் இருவரும்
பிடித்தவை  பிடிக்காதவை
அறிந்து கொண்டோம்
இரவு தருணங்களில்
தினமும் கனவுகண்டேன்
திருமணத்திற்கு நாள்குறித்தார்கள்
ஆசைப்பட்ட பொருள்வாங்கி
விரைந்தேன் தாயகம்
மணமேடைஉயர்ந்தது
பட்டுசாரியும் பொன்னகையும்
அணிந்து தேவதைபோல்
அசைந்து வந்தாள்
மலர் மாலையிட்டு
விரல் பிடித்தும்
இறுதிவரை வருவேன்
என்று சம்மதம் மூளி
என் உறவுக்குள் நுழைந்தாள்
என் ஆண்மையை உணர்ந்ததும்
முதல் முறையாக
பெண்மையை ரசித்தும்
அவள் வருகையில்
இல்லறத் துணையாக
என் இரண்டாம் தாயாக
இன்பங்களிலும் துன்பங்களிலும்
தோள்கொடுக்கும் தோழியாக
நாளைய பொழுதுகளில்
விடியலாக  அவள் ......


குறிப்பு: நண்பர்களின் வேண்டுகோளுக்காக கவிதையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கிறேன்

அன்பின் பெண்உருவம் (சகோதரி)
பிறந்த மறுகணமே
தம்பி என்றுதுடங்கி
அன்பு முத்தம்பதிப்பாள்
யாரைப்போல் என்று
தர்க்கித்துக் கொள்வாள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
எங்கவீட்டில குட்டிப்பாப்பா
இருக்கென்று பக்கத்துவீடுகளில்
ஓடி ஓடிச் சொல்வாள்
என் அழுகையை கேட்டவுடன்
அம்மாவை கூப்பிடுவாள்
படுத்திருக்கும் தொட்டிலை
மெதுவாக ஆட்டுவாள்
நோய்ப்பட்டு கிடைக்கையில்
சாமியிடம் கெஞ்சுவாள்
எனக்கு மருந்து ஊட்டுகையில்
அவள் கொமட்டுவாள்
அக்கா சொல்லு அக்கா சொல்லு
என வாய்மொழியச் சொல்வாள்
இரு கையசைத்து
தவழ்ந்துவரச் சொல்வாள்
சுவர்பிடித்து நடக்கையில்
விரல்பிடித்துச் செல்வாள்
சிறுநீர் மலம் கழித்தாலும்
சுளீரென்று அறைந்தாலும்
சிறுதாய் புன்னகைப்பாள்
தரையில் விளையாடுகையில்
மண்ணைத் தின்னால்
விருடென்று தட்டிவிடுவாள்
தாய் இல்லாத தருணங்களில்
பவுடர் பூசி திர்ஷ்டி புட்டுவைத்து
பள்ளிக்கு அனுப்புவாள்
நான் தவறுசெய்தால்
அம்மாவின் அடிகளை
முன்வந்து தடுப்பாள்
அப்பாவிடம் சண்டைபோட்டு
பணம்வாங்கி பண்டம்வாங்க
இடுப்பிலேந்தி கடைவீதிக்கு
எடுத்துச் செல்வாள்
உறங்கும்முன் அக்காமேல
மோண்டுடாத எனச்சினுங்குவாள்
அக்ஷரங்கள் சொல்லித்தந்து
கைபிடித்து எழுதகற்றுக்கொடுப்பாள்
சிலேட்டில் அவள்பெயர் எழுதினால்
வாரியணைத்து முத்தமிடுவாள்
என் தேவைகளை
அம்மாவிடம் எடுத்துரைப்பாள்
என் தவறுகளை மறைப்பவள் 
நல்லவைகளை ஊருக்கேல்லாம்சொல்வால்
என்முகம் பார்த்து
காரணங்கள் அறிவாள்
என் பால்ய நாட்களில்
முகம்பார்க்கும் கண்ணாடி
அவள் முகம் .


குறிப்பு: நண்பர்களின் வேண்டுகோளுக்காக கவிதையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கிறேன்

அன்பின் பெண்உருவம் (அம்மா )
ஐவிருமாதம் கருவில்
தோளிலும் மாரிலுமாய்
தொடர்ந்து சுமந்தவள்
அழுகையின் அர்த்தம்புரிந்து
எச்சமயுமும் பாராமல்
பாலூட்டி சோறூட்டி
என்ஆழ்ந்த உறக்கம்வரை
இமைமூடாமல் விழித்திருந்து
சிறு சலனகளில் கூட
விருட்டேழுந்து மார்தட்டி
தாலாட்டு இசைமீட்டி
நோய்ப்பட்ட நாட்களில்
உணவு கசந்து
விரதம் கிடப்பாள்
மார்கடித்து பால்குடிக்கையில்
மாராப்புவிலக்கி என்முகம்பார்ப்பாள்
அகலநின்று தன்னிடம்
தவழ்ந்து வரச்சொல்வாள்
இரத்த உறவுகளைக்காட்டி
பெயர்மொழியச் சொல்வாள்
இக்கிளியிட்டு புன்னகைகவைத்து
ஆனந்தம் அடைவாள்
சூடிய பெயரிருந்தும்
செல்லப்பெயர் இட்டுஅழைப்பாள்
இமைகள் காக்குகின்ற
கண்மணிகள் போல்
என் பால்யங்கள் காத்தாள்


குறிப்பு: நண்பர்களின் வேண்டுகோளுக்காக கவிதையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கிறேன்

Wednesday, September 8, 2010

முதல் கவிதை
ஆங்கிலத்தில மார்க்குகம்மி
பாடத்தை கவனிக்காம
என்னகவிதை வேண்டிருக்கு
கணக்கே தலைகீழ்
கவிதை ஒருகேடா
இந்த திறமையை
அறிவியலிலும் காட்டு
பரவா இல்லையே
நல்ல எழுதிருக்கியே
சமூகவில் வாத்தியார்
இன்னும் நிறையஎழுது
சிறுபிழைகளை திருத்தி
தோள்தட்டி எழுப்பி
எழுதியதை படிக்கவைத்து
மைபேனா பரிசளித்தும்
வகுப்பு மாணவர்களை
கைதட்ட சொன்னார்
தமிழ் ஆசிரியர்

Tuesday, September 7, 2010

நானும் பள்ளிக்கூடமும்
இன்றுமுதல் விடுமுறை
அறிவுப்பு பலகையில்
எழுதியிருந்த அவ்வாசகம்
சந்தோசத்தையும் அழுகையும்
ஒன்றாக தந்தது
தினமும் பயமுறுத்தும்
கணக்கு ஆங்கில
பாட வகுப்புக்கு
விடுப்புயென்ற சந்தோசமும்
கவிதை நடையில்
அழகாய் புரியவைக்கும்
தமிழ்பாட வகுப்பு
காலைத் தாமதத்திற்கு
காரணங்கள் சொல்ல்வது
கடவுள்வாழ்த்து அணிவகுப்பில்
சேட்டைகள் செய்வது
வகுப்புத் தேர்வில்
அதிகமார்க் எடுப்பதில்
நண்பர்களுடனான போட்டி
உணவு இடைவெளிகளில்
கூடிஅமர்ந்து உணவை
பகிர்ந்து உண்ணுவது
விளையாட்டு வேளையில்
யார்முதலில் விளையாடுவது
என்று தற்க்கித்துகொள்வது
ஆசிரியர் இல்லாததருணம்
தலைமை மாணவனின்
கண்காணிப்பை கேலிசெய்வது
ஜன்னல் காட்சிகளை
வேடிக்கை பார்ப்பது
சினிமாவிஷயம் பேசுவது
வீட்டுப்பாடம் எழுதாமல்
அடிவாங்க நிற்ப்பது
வார விடுமுறைகளில்
வீட்டில் பொய்சொல்லி
நபர்களுடன் கிரிகெட்
விளையாடச் செல்வது
மதியமாலை மணியோசையில்
மடைவெள்ளம்போல் சிதறிஒடுவது
ஊர்போகும் பேரூந்தில்
பெண்களை கிண்டல் செய்வது
இத்தருனங்களும் நண்பர்களும்
இல்லாத விடுமுறைநாட்கள்
ஒருவகை ரணம்தான்
கூச்சலும் கும்மாளமுமாய்
நிரம்பிவழிந்த பள்ளிமுற்றம்
வெறிச்சோடிக் கிடக்குது
பூட்டிய வாசல்
திறப்பத்தற்காக காத்திருக்கிறோம்
நானும் பள்ளிக்கூடமும்

பெண் நிறங்கள்*இருள் சூழ்ந்த
நான்கு சுவருக்குள்
மின்மினி வெளிச்சத்திற்கும்
கூட வெட்கப்பட்டு
கட்டிய கணவனுக்கு
மூடிய போர்வைக்குள்
உறவைப் பரிமாறும்
பெண்


*மணமாகும் முன்னே
கற்ப்பு களவாடப்பட்டதால்
சுருக்கு கயிற்றில்
உயிரை மாய்க்கும்
பெண்


*மனம் காதலனிடமும்
உடல் கணவனிடமும்
கட்டாய சூழ்நிலைகளில்
வாழ்க்கை நடத்தும்
பெண்


*இறந்தகணவனுக்கு பகரமாக
மாற்றானை அனுமதிக்காமல்
கருவறையை அறுத்தெறிந்து
நடைபிணமாக வாழும்
பெண்


*முக சித்திரத்திற்காக
வார இதழ்களில்
அட்டைப் படமாக
அரை நிர்வாண
சித்திரக் காட்சியளிக்கும்
பெண்


*பணத்திற்கும் புகழிற்கும்
கலைப் பெயர்களில்
ஆடைப் பஞ்சத்தில்
திரையில் தோன்றுகிற
பெண்


*எண்ணற்ற விழிகள்பார்க்க
ஒரு அங்குலத்துணிகளில்
வெட்கத்தலங்களை மறைத்து
அழகி மேடைகளில்
அன்ன நடையிடும்
பெண்


*வெறும் பணத்திற்காக
நீலச் சித்திரங்களில்
உல்லாசக் காட்சிகளுக்கு  
ஆடை கழற்றும்
பெண்

Sunday, September 5, 2010

சுய அடிமை
தனக்காக உயிர்த்தெழுப்பிய
பெண்ணிற்கும் பொன்னிர்க்கும்
ஆசை மோகத்தால்
தான் ஆளவேண்டிய
தன் திருஷ்டிகளிடத்தில்
தலை தாழ்த்தி
அடிபணிகிறான்
மனிதன்

Saturday, September 4, 2010

கண்ணுள்ள குருடர்கள்

*இரும்புத்தாழ் இட்டு
பூட்டு போடுகிறார்கள்
கடவுளின் வீட்டை
திருடர்கள் பயம்


* திருக்கோவில்களிலும்
தேவ ஆலயங்களிலு
கபர் தர்காக்களிலும்
சிறைக் கைதியாக
கடவுள்கள்


*கேட்காத கடவுளுக்கு
பொருள் நேர்ச்சைகளும்
தனக் காணிக்கைகளும்
பசித்த ஏழைக்கு
ஒருபிடிச் சோறில்லை

உள்முகம்

வலிகளை ஏற்றுக்கொள்
சித்தார்த்தன் போதனை
உயிர்களை கொன்று
வலிகளை பரப்பு
பௌத்த பிள்ளைகளின்
அழகிய கோரச்செயல்

அறியாமை

ஆயுதமேந்திய கடவுளும்
சிலுவைசுமந்த தேவனும்
உறவைத்துறந்த புத்தனும்
அன்பை போதித்தார்கள்
ஏன் மனிதர்கள்
அதர்மத்தை கையாளுகிறார்கள்

Wednesday, September 1, 2010

மூன்று தர்மங்கள்
*பக்தர்களே தர்மம்போடுங்கள்
கடவுளின் மௌனவினவல்
கோவில் உண்டியல்

*பெயர்சொல்லியும் நலம்விசாரித்தும்
தர்மம்கேட்கிறார் பூசாரி
அர்ச்சனைத் தட்டு

*ஐயா தர்மம்போடுங்கள்
குரலெழுப்பி கேட்கிறார்கள்
கோவில்வாசல்  பிச்சிக்காரர்கள்
திருவோடு


*இறந்தவர்களிடம் வரம்தேடியும்
 குறைகள் தீர்க்கவும்
மனிதர்களின் படையெடுப்பு
தர்கா சமாதிகள்

*பாவங்களை பொறுத்தருள்வாய்
கஷ்டங்கள் தீர்த்திடு
பாவிகளின்  வினவல்
உதிரம் சொட்டியபடி
சிலுவைசுமக்கும் தேவன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...