Sunday, December 26, 2010

இதயங்கள் சங்கமிப்பதில்லை


அவளால் களவாடப் பட்டது
என்னுள் களவு போனது
என்றெண்ணிய என் இதயம்
இன்னும் பத்திரமாக எனக்குள்
களவாடப் பட்டதோ நிஜம்
தேடுகிறேன் களவு போனதை 
தேடுதலின் வழியே கண்டேன் 
என்னைப்போல் களவு கொடுத்தவளை 
இருவரின் ஒன்றிணைந்த தேடலில் 
கண்டுகொண்டோம் களவு போனதை 
எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம் 
எங்களின் அந்தக் களவுகளை  
களவுகளின் சங்கமத்தில்
கடந்து வந்த தருணங்கள்
பனிமூடிய மலரின் நிமிஷங்கள்  
கதிரவனின் வருகையில்
உருகும் பனிபோல்
எங்கள் களவுகளின் ஆயுள்
குறைந்து மரணம் தழுவ
உடைந்த கண்ணாடி போல்
நாங்கள் சிதறி சென்றோம்
சந்திப்புக்களுக்கு விலங்கிடப்பட்டது
 பாதைகள் மாறிப் பயணங்கள்
சிலதொரு நாட்களின் மரணத்தில்
எதனையோ துலைத்ததாக
மீண்டும் உணர்ந்தேன்
அதனைத் தேடிய பயணத்தில்
மதி எனக்கு உணர்த்தியது
நீ துலைத்தது இதயத்தை அல்ல
ஆண்மை இதயம் உள்ளில்
பொதிந்து  வைத்திருக்கும்
பெண்மையை  ருசிக்கும்
அந்த ஆசைகளை !
இரு பாலினத்தின்
இதயங்களின்  சந்திப்பில்
சங்கமிப்பது ஆசைகள் தான் 
இதயங்கள் அல்ல . 

Wednesday, December 22, 2010

முகச்சாயம்
உரிமைகள் மறுக்கப்பட்டும்
உடமைகளும் உயிர்களும்
நிலையற்று ஊசலாடுகிறது
காசில்லாதவனின் வாழ்க்கை

வறுமைப் பிச்சைப் பாத்திரத்தில்
அரசு இடும் சலுகைகளில்
வெட்கமின்றி கையிட்டு அள்ளி
சுக வாழ்க்கை வாழுகிறார்கள்
உயர்த்துவோம் என்று வாக்களித்து
எங்களின் வாக்குகளில் உயர்ந்த
மடிப்பு சுருங்காத கதர்சட்டைகள்

நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
அடிபணிந்து நிற்கிறார்கள்
சமூகத்தின் அறிவு ஜீவிகள்

மேடைகூத்தை காணவந்த
கூட்டத்தைப் பார்த்து
நாற்காலி கனவுகளில் கூத்தாடிகள்

பணமிருக்கு அது போதும்
மேல்தட்ட மனிதவர்க்கம்
நமக்கே ஆயிரம் பிரச்சனை
ஊர்வம்பு எதுக்கு நடுவர்க்கம்
உழை ச்சால் இன்னைக்கு கஞ்சி
ஊமையாக கீழ் வர்க்கம்

குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்

அநியாயம் இழைப்பவர்கள்
அதிகாரத்தின் மேல்சுவட்டில்
அநீதி இழைக்கப்பட்டவர்களோ
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

இரவுகள் மரணித்தும்
விடியல்கள் உயிர்த்தெழுந்தும்
இயற்கை பருவங்களும் மாறி
காலத்திற்கும் வயதாகி விட்டது
இன்றும் மாறவில்லை
மனித வர்க்கங்களின் முகச்சாயம்

Sunday, December 19, 2010

ஆயுட்காலம்
கடமைகளும் சேவைகளும்
முடிந்த பின்னும்
நீளும் ஆயுட்காலம்

நீண்ட ஆயுளுடன் வாழ்க
யார்சொன்ன வாய்மொழியோ
நோய்களால் சீழ்பிடித்த
உடல் உறுப்புக்களும்
உயிர்தின்னும் மருந்துகளும்

சுய உதவியற்று
மூன்றாம் கைநாடிய
ரணமான நாழிகைகள்
ஊருக்கு வெளிச்சமிடுகிறது
மதியும் மனமும் இழைத்த
பாவங்களில்  உடல்பங்கை

இறைவனால் வெறுக்கப்பட்ட
ஜென்மமாக இருக்குமோ
பருவம் உதிர்ந்தும்
தொடர்கிறது ஆயுட்காலம்

என்று வந்து சேரும்
இவ்நரக வாழ்கைலிருந்து
முக்தி பெரும் மரணம்

Wednesday, December 15, 2010

தொட்டால் சிணுங்கி
பள்ளிக்குச் செல்லும்
ஒத்தையடி பாதைகளில்
தொட்டால் சுருங்கும்செடியை
தொட்டு விளையாடியது
இதமான பால்ய தருணங்கள்
உறவாடும் மனித சமூகத்தில்
தொடும்முன்னே வாடும்
தொட்டால் சுருங்கி மனிதர்கள்
மன வேதனை தருணங்கள்

Tuesday, December 14, 2010

அவர்களின் முகமூடிஇரத்தபந்தங்களும்
 நட்பு உறவுகளும்
வெறும் சலவைத்தாளின்
அச்சுக்கொர்வையின் மதிப்பில்
மனங்களில் விரிசலிட்டு
சிறுமைப் படுத்துகையில்
கிழிந்து விழுகிறது
பால்யங்களில் நெஞ்சிலேந்திய
அவர்களின் முகமூடி

Monday, December 13, 2010

அகப்பார்வை
*என்னை பார் யோகம்வரும்
கண்ணாடி சில்லுக்குள்
கழுதையின் சித்திரம்
நித்தமும் கணிகாணும்
சலவைத் தொழிலாளிக்கு
 அளுக்கு துணி வெளுத்தாலே
அன்றைய பசிக்கு உணவு

*வீட்டின் மேற்கூரையில்
பசிக்கு உணவுகேட்டு
காக்காவின் கரைச்சல்
உள்ளிலிருந்து ஒரு குரல்
யாரோ விருந்தாளி வராங்க

*பசிக்கு உணவு கிடைத்ததும்
 துணையை அழைத்தது பல்லி
எதோ பேசிக்கொண்டு இருந்த
இருவரில் ஒருவர்
என் வாத்தைகள் உணமையானது
இதோ கெவிளிச் சத்தம்

*எலியை பிடிக்கும் அவசரத்தில்
குறுக்கே ஓடியது பூனை
சகுனமே சரி இல்லை
வீட்டுக்கு திரும்பினார்கள்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்

Wednesday, December 8, 2010

பிரிவின் ரணம்

விடுப்பின் நாழிகையின் ஆயுள்
மரணிக்க சில வினாடிகள்
பிரிவின் ரணம் அறிந்து 
இரு  உறவுகளின்
உள்மனதின் ஓசையற்ற அழுகை
பெருக்கெடுத்த ஊற்று  நீரைப்போல்
விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள் 
மௌனம் வார்த்தைகளை சிறையிட  
இதழில் ஈரப்பதம் உலர்ந்து
சிவந்து  வாடிய முகத்தில்
இரவல் புன்னகை 
இறுகி  பற்றிப்பிடித்திருந்த 
என்னவளின் கரங்களுக்கு 
இடைவெளியிட்டது
விடுப்பின் இறுதி விடாடி 
இரத்த உறவுகளின் புன்னகை 
வழியனுப்பில்  மீண்டும் ஒரு
திரவியம்  தேடிய  பயணம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...