Thursday, December 29, 2011

வாடகை நண்பன்


நகருக்கு 
ஒதுக்குபுறத்தில் அலுவலகம் 
அதன் சிறு தூரத்தில் 
தங்கும் சிறு விடுதி 

அன்று 
முதல்நாள் பட்ட பகலிலும் 
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது 
 மூனேமுக்கால் சுவருகளும் கதவும் 

அன்றைய இரவில் 
தனித்து உறங்க முயற்ச்சித்து 
பயத்தில் அயர்ந்து தூங்கினேன் 
நன்றாய் விடிந்த பிறகு 

சில 
நாட்களின் ஓட்டத்தில் 
நல்ல நண்பர்களாய் இணைந்தோம் 
தொடர்கிறது இன்றுவரையிலும் 

உன்சுவற்றை 
ஆணியால் துளை இட்டபோதும் 
சமையல் தருணத்தின் வெப்பத்திலும் 
 எனக்காய் சகித்தாய் வேதனைகளை 

நான் 
சிந்திய புன்னகையும் கண்ணீரையும் 
உன் சுவற்று இடுக்குகளில் 
ஒழித்து வைத்து இருக்கிறாய் 

என் 
நன்மை தீமை செய்கைகளை 
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய் 
அதற்கு நீயே சாட்சியானாய் 

விடுமுறைகளில் 
விடியலில் வெளியே சென்றாலும் 
இரவினில் தலையசைக்க 
உன்மடியை   நாடிவருகிறேன் 

என் 
உணர்வுகளை உணர்ந்த 
பந்த உறவுகளின் வரிசையில் 
நீயும் ஓர் உறவு 

இது 
காலத்தின் கட்டாயம் 
ஆறாண்டு உறவை முறித்து 
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன் 


உன் 
ஓசையற்ற மௌனப் புன்னகையில் 
உன்னுடனான நினைவுகளுடன் 
படி இறங்குகிறேன் 


Monday, December 26, 2011

மீண்டும் ...மீண்டும்...இன்பங்களில் 
மலரும் புன்னகையும் 
துன்பங்களில் 
உதிரும் கண்ணீரும் 
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது 
வாழ்வின் அர்த்தங்களை 

ஒரு முறை 
உயிர்த்தெழுந்து 
மனித ஜீவனை உயிரூட்டி 
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு 
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின் 
உன்னத தருணங்கள் 

அகம் 
யாசித்த அந்த தருணங்கள் 
மீளாதென்று அறிந்த பின்பும் 
அதன்அழகிய  நினைவுகளோடு  
வாழ முற்படுகிறார்கள் 
இங்கே சில மனிதர்கள் 

அந்த 
மனிதர்களின் வரிசையில் 
இதோ நானும்

Monday, October 31, 2011

உழைப்பு ஒரு தேடல்உழைப்பு 
மனிதன் வாழ்வதற்காக 
இறைவன் அருளிய அற்புத 
பொக்கிஷம் 

இவன் 
உயிருள்ள மனிதன் 
உடல் உறுப்புக்களின் உழைப்பின் 
உயிர்வெளிச்சம் 

மண் 
பொருள் உயிர்கள் உருவங்களில் 
உழைப்பின் சில அடையாளம் 
இரவல் உறவு 

மனிதன் 
மயானம் செய்கையில் 
அவனில் உதிர்ந்து விழும் 
அற்பங்கள் 

உணர்வும் 
உணர்ச்சிகளும் மனிதனின் 
உழைப்பின் உருவமற்ற 
ஆன்மா 

மனிதனை 
ஆட்டி வைப்பவர்கள் 
அவன் ஆளவேண்டியவர்கள் 
மனக் கோட்பாடு 

எண்ணமும் செயலும் 
நாளைய இறைசன்னதியின் 
நன்மை தீமைகளின் 
சாட்ச்சியாளர்கள் 

உழைப்பில் 
அகத்திலும் புறத்திலும் 
நடுநிலையை பேணும் மனிதன் 
உயர்கிறான் இறை அகத்தில் 

அன்பு 
காதல் 
நட்பு 
உறவுகள் 
இவை மனித உழைப்பால் 
மனிதன் தேட வேண்டியவைகள் 

புன்னகையை 
செலவு செய்து 
உறவுகளை சேமிப்பவன் 
உழைப்பில் உயர்ந்தவன் 

  

Saturday, October 29, 2011

முந்நூறு கிறுக்கல்கள் முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள் 
கிறுக்கியது என்  கரமாயினும் 
கிறுக்கச் சொன்னது 
சமூகம் 

இவர் 
இவர்கள் என் குருநாதர் 
அடையாள பொய் சொல்லுகையில் 
என்னோக்கி முகம் சுளிக்கும் 
சமூக ஆசான் 

படைப்பு 
இறைவனால் ஆக்கப்பட்டது 
மனிதர்களின்  தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது 

அறிவு 
கற்பவனுக்கும் 
கற்றுத் தேர்ந்தவனுக்கும் 
கற்றுக் கொடுப்பவன் 
இறைவன் 

சொல்படலம் 
மெய்யா பொய்மையா 
மனிதர்கள் தர்க்கிக்கலாம் 
இறைவன் கையில் தான் 
தீர்ப்பு 

கையளவு 
கற்றவனும் கற்காதவனும் 
வாழ்கிறார்கள் மடிகிறார்கள் 
கற்றதில் வாதம் கொள்பவர்கள் 
வாழப் பயப்படுகிறார்கள் 

வாழ்வின் 
ஒவ்வொரு அசைவுகளிலும் 
 இறைவன் பதிந்து செல்கிறான் 
அவன் இருப்பை

வாழ்க்கை 
இறைவன் எழுதிய கவிதை 
அதன் அதன் தருணங்களில் 
வாசிக்கபடுகிறது 

ஒரு 
கவிதை வாசிப்பின் முடிவில் 
மறுகவி பிறப்பெடுக்கும் 
இது இயற்கை கூற்று 


 ஒன்றை 
எழுதுகிறவன் எழுதும் முன் 
தன் சிந்தைத் திரையில் 
வாசிக்கிறான் 

சிந்தையில் 
எழுதும் வல்லமையுடைவன் 
இறைவன் மட்டுமே 
இது என்னதென்று மார்தட்டுவது 
மடமை 


எழுதத் 
தெரியாதவன் கையில் 
எழுதுகோல் கிட்டியதன் வினை 
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்  
கிறுக்கல்கள் 

-செய்தாலி


Tuesday, October 25, 2011

காதல் ஒரு அடையாளமா ?காதலிக்கிறேன் 
அவனும் அவளும் பரிமாறும் 
சொல்லின் முடிவில் இறக்கிறது 
அவர்களின் காதல் 

அவர்கள் 
காதல் செய்கிறார்கள் 
செய்கை பதியும் அடையாளம் 
அவர்களின் அபிநயங்கள் 

பருவங்களில் 
காதல் தளிர்கிரதாம் 
வயதுக்குள் சிறைவைக்கிரார்கள் 
காதல் ஞானமற்றவர்கள் 

 பிஞ்சுக் காதல் 
பருவக் காதல் 
கள்ளக் காதல் 
வயோதிகக் காதல் 
பெயர் அடையாள சுமையில் 
மௌனமாக அழுகிறது காதல் 

மனிதன் 
தத்தம் உறவாடுவதர்காக 
இறைவன் இட்ட பந்தமுடுச்சு 
உறவுகள் 

இறைவனின் 
ஒருதுளிக் கருணைதான் 
 இந்த பூமியின் புன்னகையும் 
மனித நேசமும் 

உருவமற்ற 
இறை அன்பினை 
வயதுகளிலும் பெயரிலும் 
அடையாள படுத்துதல் சரியோ ?-செய்தாலி 


எல்லா அன்பு உள்ளங்களுக்கும் என் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 

Thursday, October 20, 2011

பிள்ளைக்கு மகளாய் தாய்

ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன் 
கண்ணைக் கசக்கி விழிதிறக்க 
ஆறுமணியை காட்டியது கடிகாரம் 

எழுந்தவன் 
மெல்ல சோம்பலை முறிக்க 
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது  
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு 
சத்தம் போட்டது கேட்டுச்சு 
கனவுல உங்க அம்மாவா 
நக்கல் கேள்வியுடன் மனைவி 

 அம்மா 
 கூப்பிடுவது போல்  சத்தம் 
மனைவிக்கு பதிலத்தபடி 
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்  

மேஜையில் 
கைபேசி அழைத்தபடி துடிக்க 
கையில் எடுத்த மனைவியோ 
ஹலோவுக்குப் பின் மௌனமானாள் 

வாடிய 
முகத்துடன் ஓடிவந்து 
 அவன்னோக்கி  கைபேசியை நீட்டுகையில் 
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா  தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா 
அழுத குரலுமாய் தங்கை 

அச்சேதி 
இடியாய் நெஞ்சில் விழ 
நாளத்தில் குருதியோட்டம் நிற்க 
தளர்ந்து விழுந்தான் அவன் 

வார்த்தைகள் 
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள 
பேசா ஊமையைப்போல் மௌனமாக 
அழுதது அவன் இதழ்கள் 

ஊருக்கான 
நாழிகைகளின் பயணத்தில் 
வீடுவரை ஏங்கி அழுததில்  
விழிகளில் வற்றியது கண்ணீர் 

பேரூந்தில் 
வந்திறங்கியவன்  
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்  
ஓடிவந்து எடுத்த உறவுகளோ 
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம 
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு 
 உறவுகாத்த  குலசாமியும் சான்ச்சிருச்சு 
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும் 
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ 
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை 

உங்களுக்கெல்லாம் 
பாலூட்டி வளத்தவளுக்கு 
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே 
பக்கத்து வீட்டுக் கிழவி 

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும் 
நாதியற்று உசுரவிட்டுட்டா 
புலம்பியபடி அம்மாவின் தங்கை 

பொழப்புக்காக 
அங்க இங்கன்னு போயிட்டீங்க 
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல் 
சம்பாதிச்சு என்ன புரோஜனம் 
உறவுக்காரர்களில் ஒருவர் 

ப்பா..அப்பா   
பாட்டி துனியைமூடி தூங்குது 
எழுதிருக்க சொல்லுங்கப்பா 
அவனின் இரண்டுவயது மகன் 

பாட்டிக்கு 
கொஞ்சம்  உடம்பு சரியில்லை 
பாட்டி தூங்கட்டும் என்றபடியே 
மகனை வாரியெடுத்து அழுதான் 

பத்துமாசம் 
சுமந்து பெத்த தாயை 
பாடையில சுமந்து கொண்டு 
மயான பயணத்தில் அவன் 

என்னப்பெத்த 
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா 
தலைப் புள்ளையாய் பிறந்தேன் 
வாய்விட்டுக் கதறினான் அவன் 

இரண்டாம் நாள் 
இறுதிக் கிரிகைகள் முடிந்து 
வீட்டுக்கு வந்தவன் கண்டான் 
இரவல் புன்னகையிட்டு மனைவி 

அவள் 
காதில் எதோ முனுமுனுத்தாள் 
ஆழ்ந்த துயர துக்கத்திலும் 
மெல்ல மலர்ந்தது அவன்முகம் 

நிச்சயமா 
இது பெண்குழந்தை தான் 
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய் 

பிள்ளைக்கு 
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய் 
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி

பிள்ளைக்கு   மகளாய் தாய் 


Tuesday, October 18, 2011

அவளின் அந்த ஆசை

அன்று 
அவளுடனான

ஒரு தனிமைப் பொழுதில் 

என் 
காதோரத்தில் மெல்லிதாய் 
முணுமுணுத்தது அவள்   இதழ்கள் 

இதழ்கள் 
உதிர்த்த ஓசைகளில் 
அவளின்  ஆழ்மனத்தின் ஆசைகள் 

அங்கு 
வெகுதூரத்தில் சாந்தமாய் 
மனித வாசமற்ற ஓரிடம் 

அன்றைய 
வேலைமுடிந்து அசதியில் 
உறங்கச் செல்லும் 
கதிரவன் 

உலவும் 
மேகங்களுக்கு இடையில் 
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது 
நிலவு 

இருளின் 
ஒரு துளி சிதறிவிழ 
நீல வானம் முகம்சிவக்கும் 
அந்திமாலை 

தன் 
மெல்லிய கரங்களால் 
கிச்சுகிச்சு மூட்டி வருடும் 
தென்றல் 

நிசப்தம் 
உறங்கும் நம் புதுவுலகில் 
நமக்குத் துணையாக 
இயற்கை தோழமைகள் 

மௌனம் 
வழிந்தொழுகும் ஆற்றங்கரை 
அதில் மெல்லத் தளும்பும் 
நீரலைகள் 

அந்த 
நீரலைகளின் நடுவே 
நமக்கு மட்டுமாய் அமர 
ஒர்மேடை 

சிம்மினி 
விளக்கின் அகத்தினில் 
மெல்லப் புன்னகைக்கும் 
ஒளிச்சுடர் அலங்காரம் 

நம் 
சார்ந்த சலனங்களை 
சிலநாழிகை மட்டும் களைந்து 
பிறந்த குழந்தைகளாய்

அந்த 
சாயான தருணத்தில் 
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும் 
இதழ் திறக்கும் இதயங்கள் 

புன்னகை  
பாத்திரத்தில் பரிமாறவேண்டும் 
நம் ஆழ்மனதில் உறங்கும் 
எண்ணங்கள் 

நம் 
உணர்வும் உணர்ச்சிகளும் 
தத்தம்  தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும் 

பசிக்கு 
முத்தங்களை உண்டு 
உமிழ்நீரை பருகி 
 காதல் தாகம்  தணிப்போம் 

உலகம் 
உறங்கும் வேளையிலும் 
விழிகள் விழித்திருக்கவேண்டும் 
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும் 

அந்த 
மெல்லிய முனங்களிலேயே 
மார்பில் தலைசாய்த்து 
அயர்ந்து தூங்கிவிட்டாள்

பிரிதொரு நாளில் 
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது 
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள் அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள் 
அவளுடனான  அவனின் காதலால் 
உயிர்த்தெழுந்தது அன்று 
அவர்களின் திருமண நாள் 
இறைவன் படைத்த இயற்கைகளை 
அவளுக்கு பரிசாக அளித்தான் 
தலைவன் 

இரட்டிப்பு 
இன்பத்தில்  தத்தளித்தவள் 
வாரி முத்தமிட்டாள் 
தன் காதல் தலைவனை 

மீத 
நாழிகை தருணங்கள் 
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில் 
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை 

-செய்தாலி 

Thursday, October 13, 2011

மர்மத்தை அறுத்தெறிஊரோரத்தின் 
ஒதுக்கப்பட்ட குளக்கரையில் 
நீர் குடித்து கிடக்குது  

அங்கே 
புதர்களில் புறப்படும் 
புகையினில் கருகும் நாற்றம் 
வீட்டின் 
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு 
 தாயின் கதறல் சப்தம் 

ஊர்கூடி 
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்  
காட்சிப் பொருளாய் ஒர்நிழல் 

நித்தம் 
நாளிதழிலும்  ஊடகத்திலும் 
நெஞ்சைக் கீறும் செய்திகள் 

குளக்கரையில் 
 நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல் 

புதரில் 
பாதி வெந்த நிலையில் 
உருவம் சிதைந்த உடல் 

வீட்டின் 
அந்தரக் கயிற்றுச் சுருக்கில் 
பிடைபிடைத்து மடிந்த உடல் 

ஊடகத்தில் 
ஊர்பயல்கள் தின்று கக்கிய 
சக்கையாக உயிருள்ள சவம் 

இங்கே 
அழுகியும் 
கருகியும் 
சுருக்கிலும் 
உயிர் சவமாயும் 
மடிந்து கிடப்பதும் நிற்பதும் 
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள் 

குழந்தைகள் 
தெய்வத்திற்கு சமம் என்னும் 
இந்த பாரத திருநாட்டில்  
கற்ப்பு இழந்து மடிகிறது 
குழந்தை தெய்வங்கள் 

உயிர்குடித்த 
அரக்க ஜந்துக்கள் 
பயமின்றி  சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும் 
உயிருடன் திரிகிறது 

நீதிக்கு கண்ணில்லையோ 
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ 
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ 
இறைவனுக்கும்   கருணை இல்லையோ 

பட்ட காயம் ஆறும்முன் 
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது 
சமூக நெஞ்சு 

காம இச்சிக்குள் 
சிதைந்து மடிந்த ஜீவன்களின் 
ஆத்ம சாந்திக்காவது 
சிதைதவனின் மர்மத்தை 
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம் 

Tuesday, October 11, 2011

தாய் பசித்திருக்கிறாள்

அழும் குழந்தை 
வெட்டவெளியில் திறந்த மார்பை 
முந்தானைக்குள் மூடி 
 பாலூட்டும் தாய் 

தன்மடியில்   
பால் வற்றும் தருவாயில் 
கன்றிற்காக  கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு 

கண்தெரியாத குட்டியை 
வாயில் கவ்வி எடுத்து 
 பால் மடியினை காட்டுகிறது 
தாய்ப் பூனை 

தன் வாயில் 
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை 
குஞ்சுகளுக்கு ஊட்டியது 
தாய்க் காகம் 

கிளறிய குப்பையில் 
உணவைக் கண்டவுடன் 
தன் குஞ்சுகளை அழைத்தது 
தாய்க் கோழி 

தம் 
குழந்தைகளின் பசியும் 
தாயின் மனசும் 
தாய்மையின் மாசற்ற  உன்னதம் 

வீட்டுக்கு 
இந்தக் கிழம் வேண்டாம் 
முதியோர் இல்லத்திற்கு துரத்தும் 
நவநாகரீக பெண்மைகள் 

தன்மக்களின் 
வீடுகளுக்கு இடையே 
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும் 
தாய்மார்கள் 

கழுத்து வரை 
தின்ற களைப்பில்  
மனைவியுடன் வீட்டில் உறங்கும் 
பிள்ளைகள்

தாய் அவள் 
பசித்திருக்கையில் 
உணவுண்ணும் பிள்ளைகள் 
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் 

Sunday, October 9, 2011

உறவும் உறவுகளும்

தவழுகையில்
நம்மை கொஞ்சிக்  குலவிய
முதிர்ந்த குழந்தைகளான 
தாய்தந்தை 

பால்யங்கள் 
உதிரும் அந்நாட்களில் 
மெல்ல மெல்ல விலகும் 
நேற்றுவரை விளையாடிய 
உடன்பிறப்புக்கள் 

காளைப் பருவத்தில் 
உபதேசங்களில் மட்டும் 
உறவை வெளிப்  படுத்தும் 
உறவும் உறவுகளும் 

சந்தோச
துக்க சடங்குகளில் 
வெறும் கடமைகளுக்காக 
உறவை பதியும் உறவுகள் 

கால நாழிகையின் 
 இடைவெளிப் பருவங்களில்
 உறவுகளில் உதிர்கிறது  
உறவின் பிணைப்பு 

காலத்தின் முதிச்சியில் 
வெறும் அடையாளங்களில் 
அகப்பட்டு பரிதாபமாய்  
நேற்றைய உறவுகள் 

கருவில் 
ஒட்டப்பட்ட உறவை 
தொப்புள்கொடி வெட்டி 
உறவின் உறவைப் போதிக்கிறான் 
இறைவன்

வாழும்வரை 
பாசமும் நேசமும் 
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப 
நிறங்களை மாற்றிக்கொள்கிறது

தம் சுயத்தில் 
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது 
உறவு 

Thursday, October 6, 2011

வீதிக்கு வந்த இறைவன்ஓர்நாள் 
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன் 
அவசர அவசரமாய் 
ஓடும் மனிதர்களுக்கு இடியில் 
மெல்ல நடந்தான் 
இறைவன் 

வீதியின் ஓரங்களில் 
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள் 
இறைவனை நோக்கி 
புன்னகைத்தது 

வீதி நெடுக
குவிந்துகிடந்த  துக்கங்கள் 
இறைவனை நோக்கி 
கண்ணீர் சிந்தியது 
வீதியில் அங்காங்கே 
 படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது 
இறைவனை  


நஞ்சும் 
காழ்ப்பும் 
வஞ்சமும் 
குரோதமும் 
வீதியில் பின்னிப்பிசைந்து 
அகம் கொட்டிய குப்பைகள் 

அன்பும் 
கருணையும் 
நன்மையையும் 
சில மனங்களில் மட்டும் 
இரவலாய் 

தேங்கி நிற்கும்  கண்ணீர் 
படிந்து கிடக்கும் ரத்தம் 
வீதியெங்கும் கொச்சை வாசம் 
மூக்கை பொத்தியபடி இறைவன் 

மெல்லிய அழுகைகள் 
தெறிக்கும் அலறல்கள் 
மௌனமான சபித்தல்கள் 
வீதியில் உலவும் சப்தங்கள் 

சில நாழிகை பயணத்திலே 
திக்குத்திணறி சுவாசமுட்டி 
நிலைகுலைந்து ஓடினான் 
வீதிக்கு வந்த இறைவன் 


Monday, October 3, 2011

சப்தங்கள்கதிரவன் 
கீழ்விழுந்து உடைய 
மண்ணில் சிதறிப் படிந்தது 
கொட்டிய  இருள் 


ஜீவராசிகள் 
சில நாழிகை தருணத்தில் 
பரந்த இருட்டறையில் நுகர்கிறது 
மரண வாசத்தை 


இருளினில் 
விழிப்பை தொலைத்த உருவங்கள் 

சிறுகலாய்  இறந்துகொண்டிருந்தது 

அந்த நகரவீதி 

நிசப்தங்களை 
உடைத்துக் கொண்டு
இரவின்   காதுகளை அடைத்தது 
எங்கிருந்தோ வந்த  சப்தங்கள்  


பிரியும் 
திசையெங்கும் பரவியது 
 பல  நிறம் கொண்ட 
முனங்கல் சப்தங்கள் 

பறவைகள் 
விலங்கினங்கள் 
மனிதர்கள் 
இரவில் அவிழ்க்கும் சப்தங்கள் 


இரவினில் 
விளிக்கும் சில ஜீவராசிகள் 
தட்டி உணர்த்துகிறார்கள் 
தூங்கும் சப்தங்களை 


செவிகளில் 
வந்துவிழும் சப்தங்கள் 
விழிப்பின் காரணத்தை 
சொல்லிச் செல்கிறது 


இருளை மூடி 
இடைவெளி மரணங்களில் 
மரணத்தை போதிக்கிறான் 
இறைவன் 


சப்தங்கள் 
இடைவெளி மரணத்தை 
சலனம் செய்கிறது

Thursday, September 29, 2011

மனதை ஆளும் துக்கம்
வாழ்வியலில் 
நீளும் புன்னகைகள் 
இடைவெளிகளில் 
வந்துபோகும் துக்கங்கள் 

அகம் 
சிந்தும் புன்னகையில் 
 உதிர்ந்து விழுகிறது 
நோயும் ,துக்கமும் 

புன்னகை 
அகத்தை குளிரூட்டி 
இதழ்கள்  வழியே 
காற்றில் கரைகிறது 

சோகங்களில் 
விழிகள்  கண்ணீர் 
உதிர்த்த  பின்னும் 
அகத்தில் தேங்குகிறது 
துக்கக் கறைகள்

சிந்தை 
அவ்வப்போது எழுப்புகிறது 
அகத்தை கீறிய 
துக்கங்களை   மட்டும் 

புன்னகைத்த 
இனிய  நாழிகைகளை 
தூக்கில் ஏற்றுகிறது 
துக்கங்கள் 

வாழ்நாளின் 
புன்னகை நாழிகைகள் 
நாதியற்று நிற்கிறது 
வாழும் மனிதர்களில் 

Monday, September 26, 2011

கருணை தர்மங்கள்
தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய் 
கட்டில் படுக்கையில் தந்தை 

அன்னம் உண்ணா தாய் 
பால் வற்றிய மார்பு 
பசியில் அழும் தம்பி 

அம்மா பிச்சை போடுங்கள் 
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி 
பசியில்  துவளும் சிறுவன் 

உயிர்போர்த்திய நான்கு  ஜீவன்கள் 
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு 

இது வறுமைக் காகிதத்தில் 
இறைவனின் கைவண்ணத்தில்  
எழுதப்பட்ட  துக்கக் கவிதை 

விழிகளால் வாசித்த மனிதர்கள் 
 அகம்   இளகி  விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை 

ஆலயம் கோவில் மசூதி 
காணாத தெய்வ சன்னதிகளில் 
நிரம்பி வழிகிறது காணிக்கைகள் 

சிறு கருணையை எதிர்நோக்கி 
வறுமைக் கோட்டின் கீழ் 
எத்தனை எத்தனை மனிதர்கள் 

உண்டியல் நிறைய காணிக்கைகள் 
உண்ண உணவின்றி பக்தகோடிகள் 
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள் 

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை 
கருணையில் உதிரும் தர்மங்கள் 
எளியவர்களின் உயிர் காக்குகிறது 

Thursday, September 22, 2011

இடைவெளி உதிர்வுகள்கருவில் சிதையும்   சிசு 
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில்  உதிரும் மனிதன் 


உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள் 


எதிர் நோக்கா ஒர்நாழிகையில் 
இளமையில் வாழ்நாளை  உதிர்ப்பவர்கள் 

நெடுந்தூர வாழ்க்கை பாதையில் 
முதுமையால்  உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை 
எழுதப்பட்ட விதியா 

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும் 
 இடைவெளி மரணங்கள் 

 மனிதர்களை நேசிப்பதாக சொல்லும் 
பரம்பொருளை நோக்கி ஒர்வினா 

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும் 
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம் 

பிறகு ஏனோ  
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

Sunday, September 18, 2011

ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்


மணமாலை சூடலுக்குப் பின் 
மங்கள கரமாக அரங்கேறுகிறது 
கடமையான கட்டில் சடங்குகள் 

உறவுகள் தாம்பத்யம் உணரும்முன் 
நடுவீட்டில் அவிழ்க்கப் படுகிறது 
சில தொட்டில் கயிறுகள் 

மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம் 
தொடரும் நெட்டோட்ட முடிவில் 
உதிர்கிறது நல்ல பருவங்கள் 

காலச் சக்கரத்தில் விழுந்து 
செல்லரித்துச் சிதைந்து விடுகிறது 
அந்த நாட்களின் நிகழ்வுகள்

தலை தூக்கும் வாரிசுகள் 
உறவுக் கடமைகள் குறைந்து 
சற்று இளைப்பாறும் தருணங்கள் 

பழுத்து நரைத்த பருவம் 
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது 
அகத்தில் புதைந்த ஆசைகள் 

பருவம் மறந்த ஆசைகள் 
ஒத்துழைக்க மறுக்கும் உடல் 
காலம் போர்த்திய நோய்கள் 

ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள் 
உறவுகளில் விழும் இடைவெளிகள் 
காலங்கடக்கும் கட்டில் பந்தம் 

இருளை இம்சை செய்யும் 
வெட்டங்களை அணைத்த பின்னும் 
அணையாமல் கட்டில் ஏக்கம் 

அகத்தில் சுவாசமுட்டும் ஆசைகள் 
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி 
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள் 

உறவில் கிட்டா உறவுத் தேடல் 
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்

உறவு விலக்கப் படுகையில் 
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது 
நவ மருத்துவ குறிப்புக்கள் 

உறவில் உறவை நீட்டுங்கள் 
உடலில் நோயை துரத்துங்கள் 
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
 


Thursday, September 15, 2011

அந்த ஊர் வீதி


சொல்லாமல் சென்ற கதிரவன்  
 நீலமேகத்திற்குமுகம் சிவக்க 
மெல்லிய புன்னகையிட்டு நிலவு 

தன் மடியில் இருப்பவர்களுக்கு 
மெல்ல கிளைகளால் விசிறியது 
வீதியின் முச்சந்திலுள்ள மரம் 

மரியாதை நிமித்தமாய் நின்றபடி 
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள் 
 நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள் 

சற்றுநேரமுன்  நடந்த வீதியில் 
தரையினை உற்றுப் பார்த்தபடி  
வீதியில் பணத்தை தொலைத்தவன் 

வீதியின் ஆரம்பப் பகுதியில் 
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி 

வாசலில் வழியனுப்பும் உறவுகள் 
திருபி பார்த்தபடி செல்கிறார்கள் 
வெளியூருக்கு  பயணம் புறப்பட்டவர்கள் 

வழிப்போக்கர்களை வழி மறித்து 
அடையாள முகவரி கேட்கிறான் 
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன் 

எதிரெதிர் வீட்டு மாடிகளில் 
சைகையால் பேசிக் கொண்டனர் 
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள் 

மும்மரமாக  எதைப்  பற்றியோ 
 வாயிச் சண்டை இடுகிறார்கள 
வாசலில் சில அண்டைவாசிகள் 

எங்கிருந்தோ வந்த அழைப்பு 
விடாது அழுதது  அலைபேசி 
ஆள் இல்லாத வீடு 

அன்னப் பாத்திரமேந்தி 
வீடுகள் தோறும் ஏறியிறங்கும் 
 மாலைநேர  வாடிக்கைப் பிச்சைக்காரன்  

வீதியில் விளையாடும் குழந்தைகள் 
அரட்டை அடிக்கும் காளையர்கள் 
வேடிக்கை பார்க்கும் பெருசுகள் 

ஆயிரம் காரண காரியங்கள் 
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள் 
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய்  வீதி
Sunday, September 11, 2011

அழகும் அசிங்கமும்தலைவன் ரசிக்கும் அழகை 
ஆடையின் அளவு குறைத்து 
காட்சியாக வீதி விழிகளுக்கு

தலைக்கு நீராடும் வேளைகளில் 
கூரையில் காகத்தை துரத்தி 
 அங்கம்மறைக்கும் நாணம் அழகு பெய்யும்  சிறு மழையினில்
கதிரவனின் இளம் சூட்டிலின் 
கலைந்தொழுகும் இரவல் சாயங்கள் 


விடாது கொட்டும் அடைமழையிலும் 
தொப்பலாய் நனைந்தும் கலைவதில்லை 
கமழும் மண்வாசனை அழகு 

நகரத்தின் உடுப்பின் வநாகரிகம் 
 வீதிவெளியில் எட்டிப் பார்க்கிறது 
பெண்மையின் மார்பகக்  கண்கள் 

போர்த்தும் மேலாடை அழகிற்கு
ஆயிரம் கவி தளிரிடுகிறது
கவிஞர்களின் சிந்தை கருவறையில் நித்தம் உடுத்தும் ஆடையாய்
 நவநாகரீகத்தின் பந்த உறவுகள் 
கழிப்பறையாகும் வெட்கத் தலங்கள் 


உள்ளம் கவர்ந்த கள்வனுக்கும் 
கொடிவேலிக்கு பிறகே முந்தி 
கோடுகளில் பந்த  உறவுமுறை 


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு 
பெண்மையின் தூய்மை அழகுக்கு 
இறைவன் போர்த்திய ஆடைகள் 


 வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள் 


-செய்தாலி 

Thursday, September 8, 2011

அவளின் அந்த நாட்கள்
இன்று உறவுக்கு தீட்டாம் 
அவளின் வீடுதேடி வந்தவர்கள் 
திரும்பினார்கள்  வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு 
 வருடல் இன்றி அழுதது 
மேசையில்  துடிக்கும் கைபேசி

 வலியில் துவளும் நொடியில் 
விழிசிந்திய நீர்த் துளியில் 
இடையே ஆனந்தத் துளிகள் 

உடைபட்டு சிதறிய குருதியில் 
வாழ விருப்பமற்று வெளியேறியது 
தலையெழுத்து தெரியாத கரு 

சீண்டல் சலனங்கள் இன்றி 
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்   
அவளின் அந்த நாட்களில் 

-செய்தாலி 

Tuesday, September 6, 2011

புகழ் தேடும் நவதலமுறை

உயரும் ஊடக மேடைகளில் 
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம் 

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும் 
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள் 

பக்குமற்ற பிஞ்சு மனங்களில் 
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும் 
புகழுக்கான  நவநாகரீக கலைகள் 

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை 
நாணம் மானம் முற்றும்துறந்து 
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள் 

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும் 
புகழுக்கான விடா நெட்டோட்டம் 
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள் 

நவநாகரிக வாழ்க்கை வீதியில் 
கண்கட்டி  மனிதர்களின் பயணம் 
வாசலை திறந்துவைத்து பாதாளம் 

எட்டாக் கனியின் ஆசைகள் 
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது 
அதை தேடியவர்களின் வாழ்க்கை 

 உடலின்  வக்கிரங்களை ரசிபவர்கள் 
அதீத பணத்தாசை உள்ளவர்கள் 
 இவர்களுக்கு கூடாரமாய்  கலைநஞ்சாய் படரும் புகழாசை 

அணியாய் திரளும் குடும்பங்கள் 

தொலையும்  பச்சை மனிதர்கள் உலக அரங்கக் கலைகளில் 
மகுடம் சூட இயலாமல் 
கோடி மக்களை பெற்றதாய் கலைகள் கற்பது தவறில்லை

திறனை எழுப்புவது சிறந்ததே 
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ 
அறிஞர்களும் வீரர்களுமே தேவை 
வெறுமொரு 
கூத்தாடியல்ல 

-செய்தாலி 

Monday, August 29, 2011

உறவு முறித்த உறவுநாளத்தில் ஓடிய குருதியினை 
ஒருகணம் நிற்கச் செய்தது 
அலைபேசியில் வந்த சேதி 

செவியினை நிரப்பிய சேதி 
அகத்தினில் இடியும் மின்னலும் 
 விழிகளில் சொட்டியது கண்ணீர் 

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க 
நிலை தடுமாறிய தருணம் 
உடைந்தது வலிமையிழந்து உடல் 

 அகம் தெகுட்டும் ஒவ்வாமை 
மண்ணில் விழுந்த அமிலம்போல் 
வேதனையை கக்கியது மனம் 

 அகத்தில் எரியும் அனலில் 
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல் 

ஊர் உறவுகளின் ஏளனம் 
கீறும் சொல் ஆயுதங்கள் 
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள் 

தெளிவற்று கலங்கிய மதியில்  
அவ்வோப்போது தெளிந்து ஓடியது 
ஒரு சுருக்கினில் சுயமரணம் 

மண பந்த உறவறுத்து 
படிதாண்டிய கட்டில் உறவு 
வீதியில் தொட்டில் உறவு 

அக்கரை வாழ்கையில் அவன் 
இக்கரை தனிமைகளில் அவள் 
அத்திப் பூவாய் கட்டில்பந்தம் 

திரவியம் தேடுதலின் வழியில் 
சலவைத் தாளின் போதையில் 
வாழ்கைவீதில் தொலைத்தான்  உறவை 

Sunday, August 21, 2011

வேனல் துளிகள்


உறக்கம் கலைத்தான் கதிரவன் 
இரவு விழித்த களைப்பில் 
உறங்கச் சென்றது நிலவு


மெல்ல விழிதிறந்தான் கதிரவன் 
இளஞ் சூட்டிற்கு இரையானது 
புற்களில் உறங்கிய பனித்துளிகள்

இளஞ்சூடு தட்டி எழுப்ப 
உறக்க சோம்பலை  களைந்து 
விருட்டெழுந்தது மரமும் செடிகளும் 


கொக்கரகோ கொக்கரக்கோ ....
கதிரவன் எழுந்து வருகிறான் 
ஊரை எழுப்பியது சேவல்கோழி 


குஞ்சுகளின் அன்றைய உணவிற்காக  
கூட்டிலிருந்து இறகை விரித்து 
புறப்பட்டது தாய்ப் பறவைகள்  

உறங்கும் வீட்டை உணர்த்துகிறது 
சன்னல் கதவு இடுக்குகளில்
 ஊடுருவி நுழைந்த வெளிச்சம் 


நல்லா விடிந்து விட்டது 
எண்ண உறக்கம் வேண்டியிருக்கு 
பிள்ளைகளை எழுப்பும் அம்மா 


காலையிலேயே சுளீர்ன்னு வெயில் 
எங்கோ பயணம் போவதற்காக 
வீட்டில் இருந்து புறப்படுபவர் 


 ஈரத்தை களவு கொடுத்து 
கொடியில் புன்னகை செய்கிறது 
உலர்ந்த உடுதுணிகள் 


மார்பில் கொதிக்கும் அனல் 
கதிரவன் மேல் கோபம் 
வெற்றுப்பாதங்களை சுட்டது மணல்வீதி 


நீண்ட தார் சாலையில் 
அங்காங்கே தேங்கி நிற்கிற்கும் 
கானல் நீர்த் துளிகள் 


வறண்டு தொண்டயுமாய் 

தண்ணீரின் அடையாளம் தேடி 
வீதியில் துவளும்  பாதகாணிகள்


இங்கே வந்து அமருங்கள் 
 மடியில் நிழலை விரித்து 
வழிபோக்கர்களை அழைக்கும் மரங்கள் 

உழைக்காத மனிதர்களுக்கும் 
உடலில் இருந்து உதிர்கிறது 
வியர்வைத் துளிகள் 


கருணை அற்ற கதிரவன் 
மார்பு வெடித்து பரிதபமாய் 
நீர் வற்றிய குளம்


சிதறிவிழும் அனல் வேட்கை 
நட்டு நடு உச்சியில் 
பூமியை முறைத்தபடி கதிரவன் 

Sunday, August 14, 2011

முனங்கல் மந்திரம்நிசப்தங்களை கிழித்துக் கொண்டு 
இருளின் காதை அடைக்கிறது 
அந்த முனங்கல் சத்தம் 

விசை அசைவுப் புணர்வில் 
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும் 
ஆயத்தத்தில் இரு பாலினங்கள் 

முனங்கலில் வழியும் போதை 
சுயத்தை நனைத்து நீத்திட 
விசைவில் நகரும் பொம்மையாய் மதி 

நாளத்தில் ஊருடுவி கலந்தது 
சலனங்களற்ற நிசப்த இரவில் 
காதில் ஓதப்பட்ட மந்திரம்

தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து 
வேதனையின்றி  மெருதுவாய் கீறுகிறது 
குழைந்த மெல்லிய குரலொலி 

நொடிகளின் ஆயுள் நிகழ்வு 
உறவு  பேரம்பேசும் கீழ்பாலினம் 
வாக்குறுதி  அடியரையில்  மேல்பாலினம் 

 உறவு உயிர் ஓடிய 
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...