Tuesday, October 18, 2011

அவளின் அந்த ஆசை





அன்று 
அவளுடனான

ஒரு தனிமைப் பொழுதில் 

என் 
காதோரத்தில் மெல்லிதாய் 
முணுமுணுத்தது அவள்   இதழ்கள் 

இதழ்கள் 
உதிர்த்த ஓசைகளில் 
அவளின்  ஆழ்மனத்தின் ஆசைகள் 

அங்கு 
வெகுதூரத்தில் சாந்தமாய் 
மனித வாசமற்ற ஓரிடம் 

அன்றைய 
வேலைமுடிந்து அசதியில் 
உறங்கச் செல்லும் 
கதிரவன் 

உலவும் 
மேகங்களுக்கு இடையில் 
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது 
நிலவு 

இருளின் 
ஒரு துளி சிதறிவிழ 
நீல வானம் முகம்சிவக்கும் 
அந்திமாலை 

தன் 
மெல்லிய கரங்களால் 
கிச்சுகிச்சு மூட்டி வருடும் 
தென்றல் 

நிசப்தம் 
உறங்கும் நம் புதுவுலகில் 
நமக்குத் துணையாக 
இயற்கை தோழமைகள் 

மௌனம் 
வழிந்தொழுகும் ஆற்றங்கரை 
அதில் மெல்லத் தளும்பும் 
நீரலைகள் 

அந்த 
நீரலைகளின் நடுவே 
நமக்கு மட்டுமாய் அமர 
ஒர்மேடை 

சிம்மினி 
விளக்கின் அகத்தினில் 
மெல்லப் புன்னகைக்கும் 
ஒளிச்சுடர் அலங்காரம் 

நம் 
சார்ந்த சலனங்களை 
சிலநாழிகை மட்டும் களைந்து 
பிறந்த குழந்தைகளாய்

அந்த 
சாயான தருணத்தில் 
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும் 
இதழ் திறக்கும் இதயங்கள் 

புன்னகை  
பாத்திரத்தில் பரிமாறவேண்டும் 
நம் ஆழ்மனதில் உறங்கும் 
எண்ணங்கள் 

நம் 
உணர்வும் உணர்ச்சிகளும் 
தத்தம்  தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும் 

பசிக்கு 
முத்தங்களை உண்டு 
உமிழ்நீரை பருகி 
 காதல் தாகம்  தணிப்போம் 

உலகம் 
உறங்கும் வேளையிலும் 
விழிகள் விழித்திருக்கவேண்டும் 
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும் 

அந்த 
மெல்லிய முனங்களிலேயே 
மார்பில் தலைசாய்த்து 
அயர்ந்து தூங்கிவிட்டாள்

பிரிதொரு நாளில் 
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது 
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள் 



அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள் 
அவளுடனான  அவனின் காதலால் 
உயிர்த்தெழுந்தது 



அன்று 
அவர்களின் திருமண நாள் 
இறைவன் படைத்த இயற்கைகளை 
அவளுக்கு பரிசாக அளித்தான் 
தலைவன் 

இரட்டிப்பு 
இன்பத்தில்  தத்தளித்தவள் 
வாரி முத்தமிட்டாள் 
தன் காதல் தலைவனை 

மீத 
நாழிகை தருணங்கள் 
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில் 
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை 

-செய்தாலி 

2 comments:

  1. இயல்பான வரிகளில் இனிமை ததும்பும் கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. அவர்களின் திருமண நாள்
    இறைவன் படைத்த இயற்கைகளை அவளுக்கு பரிசாக அளித்தான்
    தலைவன் ..........


    ....வாழ்த்துக்கள்.

    கவிதை அழகாய் வந்திருக்கிறது

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...