Thursday, October 20, 2011

பிள்ளைக்கு மகளாய் தாய்

ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன் 
கண்ணைக் கசக்கி விழிதிறக்க 
ஆறுமணியை காட்டியது கடிகாரம் 

எழுந்தவன் 
மெல்ல சோம்பலை முறிக்க 
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது  
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு 
சத்தம் போட்டது கேட்டுச்சு 
கனவுல உங்க அம்மாவா 
நக்கல் கேள்வியுடன் மனைவி 

 அம்மா 
 கூப்பிடுவது போல்  சத்தம் 
மனைவிக்கு பதிலத்தபடி 
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்  

மேஜையில் 
கைபேசி அழைத்தபடி துடிக்க 
கையில் எடுத்த மனைவியோ 
ஹலோவுக்குப் பின் மௌனமானாள் 

வாடிய 
முகத்துடன் ஓடிவந்து 
 அவன்னோக்கி  கைபேசியை நீட்டுகையில் 
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா  தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா 
அழுத குரலுமாய் தங்கை 

அச்சேதி 
இடியாய் நெஞ்சில் விழ 
நாளத்தில் குருதியோட்டம் நிற்க 
தளர்ந்து விழுந்தான் அவன் 

வார்த்தைகள் 
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள 
பேசா ஊமையைப்போல் மௌனமாக 
அழுதது அவன் இதழ்கள் 

ஊருக்கான 
நாழிகைகளின் பயணத்தில் 
வீடுவரை ஏங்கி அழுததில்  
விழிகளில் வற்றியது கண்ணீர் 

பேரூந்தில் 
வந்திறங்கியவன்  
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்  
ஓடிவந்து எடுத்த உறவுகளோ 
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம 
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு 
 உறவுகாத்த  குலசாமியும் சான்ச்சிருச்சு 
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும் 
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ 
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை 

உங்களுக்கெல்லாம் 
பாலூட்டி வளத்தவளுக்கு 
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே 
பக்கத்து வீட்டுக் கிழவி 

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும் 
நாதியற்று உசுரவிட்டுட்டா 
புலம்பியபடி அம்மாவின் தங்கை 

பொழப்புக்காக 
அங்க இங்கன்னு போயிட்டீங்க 
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல் 
சம்பாதிச்சு என்ன புரோஜனம் 
உறவுக்காரர்களில் ஒருவர் 

ப்பா..அப்பா   
பாட்டி துனியைமூடி தூங்குது 
எழுதிருக்க சொல்லுங்கப்பா 
அவனின் இரண்டுவயது மகன் 

பாட்டிக்கு 
கொஞ்சம்  உடம்பு சரியில்லை 
பாட்டி தூங்கட்டும் என்றபடியே 
மகனை வாரியெடுத்து அழுதான் 

பத்துமாசம் 
சுமந்து பெத்த தாயை 
பாடையில சுமந்து கொண்டு 
மயான பயணத்தில் அவன் 

என்னப்பெத்த 
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா 
தலைப் புள்ளையாய் பிறந்தேன் 
வாய்விட்டுக் கதறினான் அவன் 

இரண்டாம் நாள் 
இறுதிக் கிரிகைகள் முடிந்து 
வீட்டுக்கு வந்தவன் கண்டான் 
இரவல் புன்னகையிட்டு மனைவி 

அவள் 
காதில் எதோ முனுமுனுத்தாள் 
ஆழ்ந்த துயர துக்கத்திலும் 
மெல்ல மலர்ந்தது அவன்முகம் 

நிச்சயமா 
இது பெண்குழந்தை தான் 
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய் 

பிள்ளைக்கு 
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய் 
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி

பிள்ளைக்கு   மகளாய் தாய் 


1 comment:

  1. அருமையாக உணர்வின் வெளிப்பாட்டைக் கவிதை வரிகளில்
    தொடுத்துள்ளீர்கள் .இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான
    பகிர்வு .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...