Wednesday, March 28, 2012

ராசாத்தியின் சடங்குகள்

நாடி நரம்புகள் 
செயலிழந்த சரீரத்தில் 
இழுபடும்  மூச்சில்  துடிதுடித்தபடி 
உயிர் 

உறவுகள் அழ 
ஊரார் அனுதாபம் உதிர்க்க 
நடுவீட்டில் காட்சிப் பொருளாய் 
நான் 

தலைப்புள்ள 
அவன் பால் ஊத்தினால்தான் 
இழுத்துகிட்டு இருக்க உசிரு அடங்கும் 
கூட்டத்தில் யாரோ 

நொடிகளில் மரணம் 
இமைகள் மெல்லிதாய் மூட 
சிந்தை திரையில் ஒளிர்ந்தது 
பழைய  நிகழ்வுகள் 

ங்க.. ங்க ...
பச்சைகுருதி படிந்த உடலுமாய் 
தொப்புள்கொடி வெட்டிய வலியில்
முதல் அழுகை 

ராசாத்தி ராசாத்தி 
காதுகளில் ஓதப்பட்ட சொல் 
இதழிடையே விழுந்த சுவை 
ச்சேனைத் துளி 

கூடிவந்த சிலர் 
என்னை தொட்டு தூக்கியும் 
முத்தமிட்டும் சிதற விட்டனர் 
புன்னகையை 

அம்மா ....
அடிவயிற்றைப் பிடித்தபடி 
வலியால் கத்த பாவாடையில் 
பிசுபிசுத்தது ஈரம் 

பெரிய  மனுஷி 
குலவ சத்தமும் மஞ்சள் நீரும் 
ஊற்றி ஊருக்க்ச் சொன்னார்கள் 
உறவுகள்

சீவி சிங்காரிச்சு 
எத்தனையோ ஏதேதோ மனிதர்களின்முன் 
தொழுதும் கும்பிட்டும் இறுதியில் 
சம்மத மூளல் 


உறவுகளையும் 
ஊரையும் தட்டியெழுப்பி தடபுடலாக 
அரங்கேறிய பெரும் சடங்கு 
திருமணம் 

கைநிறைய
வளையலும் வாய்நிறைய இனிப்பும் 
தலைப்பிரசவ தாய்வீடு வழியனுப்பல்
சடங்கு

சின்னதும்
பெரியதுமாய் எத்தனை எத்தனையோ
காரண காரியங்களற்ற சடங்குகளின்
அரங்கேற்றம் 

நீண்ட
இணை பயணத்திற்குப்பின்
உறவையும் உயிரையும் முறித்து
வாழ்கையை பங்கிட்டவன் 

ஒப்பாரி ஓல 
சத்தமிட்டும் கண்ணீர் ஒழுக்கியும் 
 பொட்டும் தாலியும் வளையலும் உடைத்த 
விதவைச் சடங்கு 

சற்றென 
நினைவுகளில் கருமை படிய 
முதல் சீம்பால் குடித்து வளர்ந்த  மூத்தமகன் 
இறுதிப் பாலுமாய் நிற்பத்தை கண்டாள்
மூடிய இமைவழியே 

இறுதிப் பாலின் 
ஒருதுளி இதழ் நனைக்கக 
ஒரு பெரும் மூச்சில் அணைந்தது 
உயிர் 

எதோ ஒரு 
ஆற்றங்கரை நீரில் தற்பனம் 
மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தாள் 
ராசாத்தி 

வார மாத 
வருடமென தொடர்கிறது 
ராசாத்தி இறந்தபின்னும் அவளுக்கான 
சடங்குகள் 


29 comments:

 1. சொல்லில் அடக்க முடியா துயரங்களை
  எப்போதும் தூக்கி செல்லும் பெண்ணினம்
  அவை சுமைகள் என்று தெரிந்தும் சுகமாக
  எடுத்து செல்லும் மன நிலை
  அவளை தவிர வேறு யாராலும் முடியாது ........

  உங்களின் வார்த்தைகள் சடங்குகளின் சந்ததியில் நிற்க வாய்த்த உணர்வை தருகிறது

  சமூகத்தின் அவலத்தை வெளியிடுபவன் உணர்த்துபவன் சிறந்த கவிஞன் ................நீங்களும்

  ReplyDelete
 2. ஒரு
  உயிரின்
  பயணம்.

  ReplyDelete
 3. அன்புச் சங்கிலி வாழ்க்கைக்குச்
  சடங்குச் சங்கிலி தொடர்கதைதான்!
  முடிந்த பின்னும் தொடர்கிறது. உங்கள்
  எழுத்துச் சங்கிலியின் வார்த்தைக் கோர்வைகள்.
  வாழ்த்துக்கள் செய்தாலி.

  ReplyDelete
 4. ஓர் இறப்பை நேரில் கண்டதை போல் ஓர் உணர்வு அருமை அன்பரே

  ReplyDelete
 5. ஒரு பெண்ணின் ஜனனம் முதல் மரணம் வரையில் மட்டுமல்ல, மரணத்திற்குப் பிறகும் தொடரும் சடங்குகள் பற்றி ஒரு ஆழமான கவிப்பார்வை. மனம் இளக்குகிறது, கவி வரிகள்.

  கவிதையில் ஒரு சின்ன நெருடல், தவறாக எண்ணவேண்டாம், எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். கவிதை நான் என்று தன்மையில் சொல்வதாய் துவங்குகிறது. முடிவில் படர்க்கையாய் ராசாத்தி மெல்லக் கரைந்துகொண்டிருந்தாள் என்று முடிகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை தன்மையிலேயோ அல்லது படர்க்கையிலேயோ இருந்திருந்தால் இன்னும் வலுவாய் இருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 6. @கோவை மு.சரளா

  நீங்கள் ஒரு கவிதையில் எழுதிய சடங்கு என்ற வார்த்தையிலிருந்தும்
  நண்பர் சத்திரியன் அவர்களின் ஒரு சொட்டு உயிர் என்ற கவிதையின் தாக்கத்தாலும்
  உருவானதுதான் இந்த கிறுக்கல்

  நிறைய நல்ல கவிதைகள் வாசிக்கும்போது
  புதிய சிந்தனைகள் உருவாகும் என்பார்கள்
  அதன் உண்மை உணர்கிறேன்

  உங்களின் விரிவான கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 7. @சத்ரியன்

  இந்த கிறுக்கல்
  உங்களின் ஒருசொட்டு உயிர்
  என்ற கவிதையில் இருந்து உறவானது

  உங்களை போன்ற நல்ல படைப்பாளிகளுடன் பயணிப்பதில்
  உண்மையில் அகம் மகிழ்கிறேன்

  உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 8. @AROUNA SELVAME

  உங்களில் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 9. @PREM.s

  உங்களில் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 10. உங்களில் கருத்திற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 11. @கீதமஞ்சரி

  நல்லதை
  சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை தோழி

  இதில் ராசாத்தி மரணப் படுக்கையில் கடந்த காலத்தை நினைவுகூருகிறாள்
  அவள் நினைவு அவளின் மரணத்தோடு முடிவடைகிறது


  ராசாத்தியின் சடங்குகளை பற்றி பிரதானமாய் எழுதுவதால்
  அவள் இறந்தபின்னும் அவளை சடங்குகள் பின்தொடர்கிறது என்று சொல்வதற்காக
  எழுதப்பட்டது அந்த இரண்டு இலக்கங்கள்

  கவிதை அவள் மரணத்தோடு முடிவடைகிறது தோழி

  உங்களின் வருகைக்கும் விரிவான கருத்திற்கும்
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 12. ஒரு மனித உயிரின் வாழ்வியலை நாவலாக்கியும் சொல்ல முடியாத ஒரு செய்தியை உணர்வை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் கூறி இருக்கின்றீர் ,... இதை விட வடிவா கூற இயலாது என்று எண்ணுகிறேன் தோழமையே ,.,, நன்றி .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. சடங்குகளை மீறிய ஒரு சரித்திரம் ஒளிந்திருக்கிறது உங்கள் வரிகளில் .

  ReplyDelete
 14. @அரசன் சே

  உங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள் நண்பா

  ReplyDelete
 15. @சசிகலா

  உங்கள் வருகைக்கும்
  உற்ச்சாக கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 16. உதயசுதாMarch 29, 2012 at 11:33 AM

  அருமையான வரிகளை கொண்டு எழுதி இருக்கீங்க செய்யது அலி.
  இதுல காது குத்துர சடங்கை விட்டுட்டீங்களே

  ReplyDelete
 17. தங்கள் விளக்கத்துக்கு நன்றி. இப்போது கவிதையை உங்கள் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  மாஷா அல்லாஹ்

  இன்றுதான் தங்களின் தளம் பார்க்கிறேன்

  அழகாக இருக்கு தொடர்கிறேன்

  ReplyDelete
 19. சரியும் தப்புமாய் எங்களுக்கென்றே ஒழுங்கு செய்யப்பட்ட எத்தனை சடங்குகள் !

  ReplyDelete
 20. அருமையான வரிகள்

  ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
  ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

  ReplyDelete
 21. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு பெண்
  தன் வாழ்நாளில் நடந்த நடக்கப்போகும்
  சடங்கு நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கும்
  அழகிய படைப்பு நண்பரே...

  ReplyDelete
 22. கவிதை உணர்ச்சி குவியல்

  ReplyDelete
 23. @ஹைதர் அலி

  வா அலைக்கும் அஸ்ஸலாம்
  உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 24. @ஹேமா

  உங்கள் கருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 25. @sathish krish

  உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 26. @மகேந்திரன்


  உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 27. @மனசாட்சி™

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 28. ஒன்றும் சொல்லத்தெரியவில்லை ...அருமை...

  ReplyDelete
 29. உணர்வுள்ள கவிதை! கடைசி வரிகளுக்குள் மொத்த கவிதையையும் சொல்லிவிட்டீர்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...